23. வானின்ற வொருகுடிவாழ் மக்கள்தனித் தனியாகத் தானின்று நனிவாழத் தான்வைத்தல் போல்நாற்றங் கானின்று பெயர்த்தெடுத்துக் கவிழ்ந்தமுடி திருத்திநறுந் தேனின்ற வின்சொல்லார் செழுஞ்சேற்றி னடுவாரே. 24. பலகுட்டி யொருதாயின் பாலுண்ட பயக்குறையால் வலியற்றுப் போமாறோர் வளர்குழியில் வளமின்றிப் பலநாற்றை நட்டில்லாப் பயனுடைய ராகாமல் நலமுற்றும் பெறவொற்றை நாற்றாக நடுவாரே. 25. வழிபொலிய மாணாக்கர் மனத்தகத்தே நட்டதமிழ் மொழிபொலிய வறிவென்னு முளைகிளம்பித் தழைப்பதுபோல் விழிபொலியப் பச்சென்று விழைவொடுசேற் றிடைநட்ட குழிபொலிய விளநாற்றுக் குருத்துவிட்டுத் தழைத்ததுவே. 26. அருந்தமிழி னிடைகலந்த வயன்மொழிச்சொற் களைகளைந்து தருந்தகைமை யோடுதனித் தமிழ்வளர்க்கும் பெரியார்போல் அருந்தியுண வினைப்பயிரை யலக்கழிக்குங் களைகளைந்து திருந்தியுர மொடுசெழிக்கச் செய்துபயிர் வளர்ப்பாரே. 27. அசும்பாரும் பயிர்வளர்வுற் றருஞ்சூல்கொண் டிரையுண்ட பசும்பாம்பின் றோற்றம்போற் புடைகட்டிப் பால்பிடித்து விசும்பாருஞ் செல்வரெனத் தலைநிமிர்ந்து விழுக்கல்வித் தசும்பாரும் பெரியாரிற் றலையிறைஞ்சிக் காய்த்ததுவே. 28. ஆய்ந்துதமிழ்ச் சங்கத்தா ரருந்தமிழ்ப்பாக் களைத்தொகுத்துத் தீந்தமிழின் பனுவல்பல செய்துலகஞ் செய்குதல்போல் காய்ந்தமணிக் கதிரறுத்துக் களத்தடித்துப் பதர்கழித்துப் போந்தமணிக் குவைதூற்றிப் பொலிவெய்திப் பொலிவாரே. 29. வாளெடுத்துப் பொருகளத்தே வலிமையொடு தொகைதொகையாய் ஆளடித்து முடிகுலுக்கி யரசர்கள்போ ரிடுவதுபோல் தோளெடுத்துப் பொலிகளத்தே சுமைசுமையாக் கதிரடித்த தாளடித்து முடிகுலுக்கித் தகவொடுபோ ரிடுவாரே. ------------------------------------------------------------------------------------------- 27. அசும்பு - சேறு. சூல் - கரு. தசும்பு - பொன், செல்வம் - கல்விச்செல்வம். | |
|
|