பக்கம் எண் :


இராவண காவியம் 147

   
          37.   செயிர்வளர விடங்கிடையாச் செழுமனையிற் றகைமையுற
               அயிர்வளர வகைசுண்ணத் தறைகள்பல வமைக்குதல்போல்
               உயிர்வளர வுணவுபடைத் தூட்டுவிக்குங் காராளர்
               பயிர்வளரப் புழுதியினைப் பாத்திபிடித் திடுவாரே.

          38.   அட்டிலிடைத் தொழில்புரியு மன்னையிளங் குழவிக்கு
               வட்டிலிடை யடிக்கடிபால் வார்த்துவளர்ப் பதுபோலக்
               கட்டியநீள் பாத்தியிடைக் கருக்கொண்ட பயிர்வளர
               அட்டிடுவா ரடிக்கடிநீர் ஆய்போலு மன்புடையார்.

          39.   பகைபட்ட போர்க்களத்தே பகைப்படையை விட்டுவைக்கும்
               வகைபட்ட விறலில்லா மறமன்னர் போலன்றித்
               தகைபட்ட பயிருணவைத் தானுறிஞ்சிப் பயன்கொல்லும்
               தொகைபட்ட களைகளைந்து தொகுவளங்கைக் கொள்வாரே.

          40.   தாலூட்டிப் பொரிகடலை தமையினமாக் கொளல்போலும்
               நூலோட்டிப் பாவினிடை நூலுடைநெய் வதுபோலும்
               சூலூட்டிப் பண்படுத்த தொகுபுழுதி யிடைகுறுக்குச்
               சாலோட்டி முதிரையினைத் தவசமிடைப் படுப்பாரே.

          41.   அறிவாளர் குலம்பெருக வறிவிலியர் குலமருக
               முறையாகப் பயில்வோர்க்கு மொழித்தேர்வு நடத்துதல்போல்
               செறிவான நிலமிளகச் சிறிதகலத் திறலுடைய
               நிறைவான பயனுதவ நெடும்பயிரை யுழுவாரே.

          42.   களையேகப் பயிருழவான் கார்பொழியச் செழியபயிர்
               வளையாது தலைநிமிர்ந்து வானோக்கி வளர்ந்துலகம்
               உளையாது வயிறார வுண்டுமகிழ் கொண்டிடப்பல்
               கிளையாகிக் கிளைதோறுங் கிளம்பினகாண் பசுங்கதிரே.

          43.   ஆழியா லுலகோம்பு மரசர்முத லனைவோரும்
               நாழியா லுயிரோம்ப நன்செயினும் புன்செயினும்
               மேழியா லுலகோம்பும் வேளாளர் விளைபயிரின்
               காழியா லுயிரோம்புங் கதிரினிது காப்பாரே.
------------------------------------------------------------------------------------------
          37. செயிர் - குற்றம். அயிர் - நுண்மை. 38. அட்டில் - அடுப்பறை.
அட்டுதல் - நீர்பாய்ச்சுதல். 39. விறல் - வலி. 40. தால் - நா. சூல் - கரு, விதை, முதிரை
- பயறு வகை. 42. உளைதல் - வருந்துதல். 43. ஆழி - சக்கரப்படை. நாழி - படி. காழி
- கதிரின் தாள்.