பக்கம் எண் :


148புலவர் குழந்தை

   
          44.   முதிர்வெய்தப் பாவிருக்க முடிந்ததுணி யறுப்பதுபோல்
               கதிர்கொய்து தாளிருக்கக் களத்தடித்துப் பொலிதூற்றி
               எதிர்பெய்த தொழிலாளர்க் கினிதீந்து மனைசேர்த்துக்
               குதிர்பெய்து விருந்தேற்றுக் கொண்டினிதுண் டிருப்பாரே.

          45.   மன்செயலுக் கொருகுறையும் வாராமற் பெருவணிகர்
               பொன்செயலுக் கொருகுறையும் புல்லாமல் மல்லாரும்
               புன்செயிலு நன்செயிலும் பொதிபொதியாத் தாஞ்செய்த
               முன்செயலின் பயன்கொண்டு முறையாக வாழ்வாரே.

          46.   மன்னுயிரின் பசியென்னும் மாபாவி கெட்டோமென்
               றுன்னவரு முலகமெனு முருள்பெருந்தேர்க் கச்சாணி
               யன்னதொழி லுழுதொழிலே யாமென்று வள்ளுவனார்
               சொன்னபடி வேளாளர் தொல்லுலகம் புரப்பாரே.

          47.   இன்னபடி வளம்பலவு மியன்றுபழந் தமிழ்ப்புலவர்
               சொன்னபடி நலம்பலவுந் தொகுதியுறச் சுடர்முடிதோய்
               மன்னருட னேதமிழ மக்களொரு மனப்பட்ட
               நன்னருட னேயிலங்கை நாடுபொலிந் திலங்கினதே.
 
நகர் - கலிவிருத்தம்
 
          48.   கலங்குத லறிகிலாக் காப்பின் மேயெலா
               நலங்களும் பொருந்திய நாட்டின் கண்ணெனத்
               துலங்கிநம் மிறைமகன் றோன்றப் பெற்றநல்
               இலங்கைமா நகரத னியல்பு காணுவாம்.

          49.   மாபெருந் தலைவர்கள் வாழ்ந்த தொன்னகர்
               தாவரும் பெருவளந் தழைத்த பொன்னகர்
               காவலின் காப்பெனக் கஞன்ற நன்னகர்
               ஏவருந் தொழுதகு மிலங்கை மாநகர்.

          50.   கூடிய பெருவளங் கொளவந் தேறியர்க்
               கூடிநம் மிறைவனைக் கொன்று நந்நலங்
               கூடிய வரையிலுங் குலைத்த பாழ்ங்கொடும்
               பீடணப் பாவியும் பிறந்த வின்னகர்.
------------------------------------------------------------------------------------------
          44. எதிர்பெய்தல் - உதவுதல். குதிர் - தவசக்கூடு. 45. மல் ஆரும் - வளம்
பொருந்திய 46. வரும் உலகம் - வளரும் உலகம். 49. தா அரும் - குறைவற்ற. கஞலுதல்
- மிகுதல், செய்தல்.