பக்கம் எண் :


இராவண காவியம் 149

   
          51.   இந்திர மொடுதிரா விடந்தென் பாலியும்
               வந்தொரு தலைப்படு மிடத்தில் வானில
               குந்தலை யுடையமுக் கூட லென்றொரு
               சந்தடர் தருமலை தானி ருந்ததால்.

          52.   நாடொரு மூன்றுமா நாடு கூடல்போற்
               கூடிடம் பொருந்திமுக் கூட லென்றவஃ
               தேடியல் கொடித்தெரு விலங்கை மாமகள்
               நாடகம் பயிலுநன் மேடை போன்றதால்.

          53.   அணிமிகு மிலங்கைநாட் டகத்தி னாப்பணோர்
               அணிமணி மேடைபோ லமைந்த வம்மலை
               மணியணி தமிழக மங்கை நன்கலம்
               புணரிய வொளிமுகம் போற்பொ லிந்ததே.

          54.   அருந்தமிழ் மக்களக் காமி ராவணம்
               திருந்தவே நுகர்ந்திடச் செய்யி ராவணம்
               பெருந்தகை வரைந்திடப் பெற்ற வாவணம்
               பொருந்திய வாவணம் போலு மாலரே.

          55.   இன்றுள விலங்கைத் தீவின்றென் மேற்கினில்
               குன்றினுக் கரசதாக் குறிஞ்சித் தாரணி
               மன்றலந் தமிழக மகளின் மார்பணி
               ஒன்றிய முத்தென வொளிறு மாலரோ.

          56.   செம்மலைத் தாங்கியேர் திகழி ருக்கைபோல்
               அம்மலை யிலங்கைமா நகரை யார்வொடு
               தம்முது கெழிலுறத் தாங்கிப் பாங்கினிற்
               பொம்மலுற் றழிவிலாப் புகழின் மேயதே.
 
ஷ வேறு வண்ணம்
 
          57.   நீரைத் தாங்கு நிலமந் நிலத்தினற்
               சீரைத் தாங்குந் திருவனைத் தாங்குதல்
               லூரைத் தாங்கு முரனுடை யேனெனை
               யாரொப் பாரென் றறையுமக் குன்றமே.
-------------------------------------------------------------------------------------------
          51. தலை - மலை முடி. 54. இராவணம் - இரு ஆவணம் - பேருரிமை.
இருமை - பெருமை, மிகுதி. இராவணன் - இரு ஆவணன் - (மக்கட்கு) மிக்க
உரிமையுடையவன், பேருரிமையுடையவன். ஆவணம் - முறிச்சீட்டு, கடைத்தெரு.
அம்முக்கூடல் இராவணனால் மக்கட்கு எழுதிக்கொடுக்கும் முறிச்சீட்டு (பத்திரம்) விற்கும்
கடை போன்றது. 56. செம்மல் - தலைவன். ‘தன்’ - தம்மென்றாயது எதுகை நோக்கி. ஏர்
- அழகு. இருக்கை - அரியணை.