70. தொடியணி முன்கைச் சுரிகுழல் நல்லார் மடியினிற் பிள்ளையை வைப்பது போல உடுவென வொண்க லொளித்திடம் விட்டே அடிபெயர்த் தேகுதித் தாடி மகிழ்வார். 71. இத்தனை கூழிந்தாக் கூழிந்தா வென்று புத்திடம் பாய்ந்தவர் போகுமுன் னோடி உத்திடை நின்றுள் ளுவப்பது பொங்க முத்து நகைச்சியர் மூலை பிடிப்பர். 72. காப்பணி மென்மலர்க் கைகளைப் பற்றி மாப்படை போற்பெரு வட்டமாய் நின்று தாப்புலி யாளைத் தடுத்துமா காத்தும் ஆப்புலி யாடி யகமகிழ் வாரே. 73. நீடுயர் பாங்கரி னின்று நிலஞ்செய் பாடமை நுண்மணற் பாங்கரி னாங்கண் ஆடமைக் கையை யழகுற வீசிக் கூடியே குப்பாங் குதிகுதிப் பாரே. 74. தொட்டிடை யாடை தொடர்பவர் சிக்காக் கட்டுவோர் கையைக் கடந்துமே கோநாய்க் குட்டி பிடித்துங் குறுநெடுந் தட்டுக் கட்டியும் வெண்ணிலாக் காலங் கழிப்பர். 75. ஓடி யொளித்து மொளிப்பவர் தம்மைத் தேடியே கண்டுந் திரும்புவ ரோர்பால் மாட மறுகில் வளைப்படு கையார் ஆடுவர் கிச்சுக்கிச் சாம்பரி யோர்பால். 76. காம்பன தோளொடு கையுற வாட வாம்பரி போல மணிச்சிலம் பாட தூம்பண வாயர் துடியிடை கோட ஆம்புரி தாண்டி யகமகிழ் வாரே. ------------------------------------------------------------------------------------------- 70. உடு - விண்மீன். இது கல்லொளித்தல். 71. உத்து - நிற்குமிடம். 72. தா - தாவுகின்ற. புலிஆள் - ஆனைத் துரத்தும் புலியாகிய ஆள். 73. ஆடு அமை - ஆடுகின்ற மூங்கில். 74. இடை ஆடை தொட்டு - இடையிற் கட்டிய ஆடையைப் பிடித்துக் கொண்டு. 76. காம்பு - மூங்கில். தூம்பு - இசைக்குழல். கோட - வளைய. ஆம் - அழகு. புரி - கயிறு. | |
|
|