பக்கம் எண் :


இராவண காவியம் 153

   
         77.    ஒண்டொடி யோசை யொடுசிலம் போசை
               மண்டல மிட்டு மயங்கிட வான
               வெண்டிரை போல விரிந்த நிலாவில்
               நொண்டி யடிப்பர் நுடங்கிடை நல்லார்.

         78.    குடுகுடு வென்று குடுவியே சென்று
               நடுவிடந் தன்னை நணுக விடாது
               படவளைப் போர்கை படாதுமே தொட்டுச்
               சடுகுடுப் பான்விளை யாடுவர் தானே.

         79.    மணிநிழல் மன்ற மருங்கிடை நாளும்
               திணிகழற் செல்வச் சிறுவர்கள் கூடிக்
               குணிலது கொண்டு குழிதனைப் புல்லி
               அணுக விடாதடித் தாடுவர் புல்லி.

         80.    கொந்தொளி மாடக் கொடுமுடி நீழல்
               செந்தமிழ் நாட்டுச் சிறுவர்கள் கூடிப்
               பந்தயங் கட்டிப் பலவகை யான
               பந்துக ளாடிப் பயன்பெறு வாரே.

         81.    வாய்ந்த மறவர் வகைபட வெல்லாம்
               ஆய்ந்து பயிற்ற வணிகழற் செல்வர்
               தீந்தமிழ் பாடிச் சினப்புலி போலப்
               பாய்ந்து சிலம்பம் பயிலுவர் நாளும்.

         82.    பைந்தமிழ் பாடிப் பரிசிலை நாடி
               வந்தவர் நல்விடை வாகைய ராகி
               அந்தமி ழோர்க்கடை யாமணி வாயில்
               கந்தெறி யானைக் களிற்றொடு செல்வார்.

         83.    மண்ணிய மேனி மணங்கொளப் பூசப்
               பண்ணமை செந்தமிழ் பாடி நறும்பொற்
               சுண்ண மிடித்துத் துடியிடை நல்லார்
               கண்ணிய வுள்ளங் களிக்குவர் மன்னே.
-------------------------------------------------------------------------------------------
         79. குணில் - குறுந்தடி. புல்லி - புற்குச்சி, புல்லியாட்டம். 80. கொந்து ஒளி -
மிக்க ஒளி. 81. சிலம்பம் - படைக்கலப் பயிற்சி. 83. மண்ணுதல் - குளித்தல்.
பொற்சுண்ணம் - மணத்தூள்.