91. வாழிய மாமனை வாயிடை நெல்லுண் கோழி யெறிந்த கொடுங்குழை மைந்தர் ஆழி தடுப்ப வலந்து நடைத்தேர் பூழியின் வீழ்ந்து புலந்திடச் செய்யும். 92. செந்தமிழ் வாணர் சிறுவர்கள் தம்மைச் சந்தனத் தொட்டி சமைந்தகை வண்டி குந்திட வைத்துக் குளிர்தரு மாலை மந்தி யிழுத்து மறுகிடைச் செல்லும். 93. சேய்தனை நாளுஞ் சிறப்பொடு தாங்கும் ஞாய்தனைத் தாங்கி நடப்பவர் போல ஆய்தமிழ்ச் சேயர் அருந்தமிழ் நூலாம் தாய்தனைத் தாங்கித் தருக்கொடு செல்வர். 94. பூவையும் பைஞ்சிறைப் புள்ளு மொருங்கு நாவலர் போல நயந்திசை பாடப் பாவைய ராடப் பனிமதி மாடத் தாவ லொடுவெரு கம்பலங் காணும். 95. மன்னிய வேழ்பரு வத்தரு முள்ளம் உன்னிய வெல்லா மொழுங்குற வாடி முன்னிலு முள்ள முதிர்குவ ரென்னில் என்னினி மைந்த ரியல்பினைப் பேசல். 96. கள்ளுறை கூந்தற் கருநெடு்ங் கண்ணாள் வள்ளுறை சிந்தி வருந்தமெய்த் தோழி அள்ளுறை வேல னதரிடைப் பட்ட உள்ளுறை கூறி யுவப்புறச் செய்வாள். 97. ஊமரை யொப்ப வொரேபிடி யாக ஆமென லின்றி யழுங்குழ விக்குக் காமுறு தக்க கனிமொழித் தாயர் மாமதி காட்டி மகிழ்வுறச் செய்வர். ------------------------------------------------------------------------------------------- 91. குழை - காதணி. ஆழி - சக்கரம். பூமி - குழைத்த சேறு, புழுதி. புலத்தல் - வெறுத்தல்; மைந்தர் புலந்திடச் செய்யுமென்க. 93. ஞாய் - தாய். தருக்கு - செருக்கு. 95. வெருகு - பூனை. 95. ஏழ்பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். 96. வள் - மிக்க. உறை - நீர்த்துளி. அள் - கூர்மை. அதர் - வழி. உள்ளுறை - உள்ளுறையுவமை. | |
|
|