பக்கம் எண் :


இராவண காவியம் 157

   
         105.    சென்றுடன் மீண்டவோர் தென்னம் பாவைக்கும்
               வென்றிவண் பொருள்கொடு மீண்ட நம்பிக்கும்
               தன்றமர் நீங்கிய தமிழ நங்கைக்கும்
               மன்றல்செய் தேதமர் மகிழு வாரரோ.

         106.    உளத்திடை யொப்புமை யுருவந் தைத்திடக்
               குளத்தெழு நிலவினிற் கூடிக் கும்பலாய்
               அளித்தொடர் குழலியர் பாடி யாடிடும்
               களத்திடை வழிநிலைக் காட்சி காண்பரால்.

         107.   இலகணி யாடையி னிலகு பாவைபோற்
               குலமகன் றமிழ்மகள் கோலங் கொண்டுமே
               கலகல வெனப்பறை கறங்க வாடலைப்
               பலகணி வழியனை பார்த்து வக்குமே.

         108.   கமழ்தரு குழலியர் கடிகொள் மேனியர்
               இமிழ்தரு துயிலறை யெளிமை யெய்தவெண்
               குமிழ்தரு வளிமணங் குடிமை கொள்ளவொண்
               டமிழ்தரு மிலவிதழ் தழுவத் தூங்குவர்.

         109.   கட்டிலை யகன்றெதிர் காலை வந்ததும்
               நெட்டிலை வாழையி னிலவு காலிள
               வட்டிலை விருந்தினர் மருவ மங்கையர்
               அட்டிலை யமிழ்துற வாக்கு வாரரோ.
 
அறுசீர் விருத்தம்
 
         110.    முன்றிலிற் குரவை யாட்டம் முடுக்கினி லிசைப்பா ணீட்டம்
               தென்றலிற் றமிழ்ப்பண் ணூட்டந் திண்ணையிற் கற்றோர் கூட்டம்
               மன்றிலிற் பல்கூத் தாட்டம் மனைதொறுந் தமிழ்ப்பா நாட்டம்
               ஒன்றலிற் றெருவ மாய்நூ லுயர்தமிழ்க் கழக மானும்.

         111.    கண்ணிய மணிபொன் னாடை கலன்மலர் சாந்த மேனம்
               பண்ணியங் கனிகாய் பால்மோர் பலவகை யுணவுப் பண்டம்
               விண்ணியல் தமிழி னன்னூல் விற்பரும் வாங்கு வாரும்
               அண்ணியோ வென்னு மோசை யலைகடல் மானு மாதோ.
-------------------------------------------------------------------------------------------
         108. கடி - மணம். எண் - எள். 109. அட்டில் - சமையலறை. அமிழ்து -
உணவு. 110. முடுக்கு - சந்து. பாண் - பாணர். மன்று - மரத்தடிப் பொதுவிடம். 111.
பண்ணியம் - பலகாரம். விண்இயல் - உயர்ந்த, சிறந்த. அண்ணி - நெருங்கி.