112. தாதயில் சுரும்புந் தேனுந் ததையநால் வகைய வாகிப் போதினை யறிவித் தாய்நூற் புலவர்கள் நிலையை யொத்து மாதர்க ளொன்றோ காதல் மைந்தரு மவாவத் தக்க கோதையு மலரு மல்குங் கொட்டிலைந் திணையி னோங்கும். 113. வழக்குடை மருங்கில் வந்து வாங்குமி னெனவே கூறும் ஒழுக்குடை யதுபோற் செந்தே னொழுக்குதீஞ் சுவையி னாற்றம் இழுக்குடை யதுவும் நீங்கா வினிமையி னளாவச் செய்யும் பழக்கடை யறவோ ருள்ளப் பான்மையிற் பொலியுந் தானே. 114. கந்தெறி களிறு மானக் கலம்பல செலுத்திக் கொண்டு வந்தய னாடர் பண்ட மாற்றியும் மதித்த செம்பொன் தந்துமென் பெற்றோ மென்னத் தக்கபல் பொருளு மேய ஐந்திணை யவாவத் தோன்று மரும்பல சரக்குக் கொட்டில். 115. அரவுரி யினைய வான்பா லாவிவெந் நிடமெல் லென்று மரவுரி கானஞ் சார மலர்க்கொடி மருங்கு சேர விரவுற விரும்பல் வண்ணம் விளிம்பையோ வியங்கள் நண்ண நிரலுற விழைகொள் ளாடை நெய்தொழிற் சாலை யோங்கும். 116. தையுறை குளத்துப் பூத்த தாமரைப் பூவைப் போன்ற ஐயுறை தரும்பொற் பட்டும் அரிமயி ரொடுவெண் பட்டும் துய்யுறை மடியுந் தொக்க துணிக்கடை தோறுந் தைத்த மெய்யுறை வடிவங் காட்டி விழைவுற வழைக்கு மாதோ. 117. ஒன்பது மணியும் செம்பொன் னுருக்கடர்க் குலங்கள் வாரித் தின்பது போல வூழூழ் சிறந்திடப் பதித்துச் சீர்சால் மன்பதை யுறுப்புக் கெல்லாம் மறைப்பென வனப்புக் காலும் மின்புதி யதுவந் தென்ன விளங்கணிக் கொட்டில் தோன்றும். 118. வளைகொடு நறுநெய் நீவி வாளரந் துமியப் பண்ணிக் களைவன களைந்து காணுங் கண்கவர் வனப்பிற்றாகத் துளைவன துளைந்து தீட்டித் தொடுகுழை யாழி பீலி வளையொடு பிறவுஞ் செய்யும் வளையணிக் கூட மோங்கும். ------------------------------------------------------------------------------------------- 114. விலைமதிக்க முடியாததும் பல்வகையதும் ஆனதால் என் பெற்றோம் என்றா ரென்க. 116. ஐ-மென்மை. அரி - மென்மை. 117. அடர் - தகடு. ஊழ் - முறை. 118. வளை - சங்கு | |
|
|