பக்கம் எண் :


இராவண காவியம் 161

   
         131.    அவ்வகழ்ப் புறத்தே நுண்கூ ரமையுமுள் மரங்கள் சூழத்
               தெவ்வர்க ளகலுங் காலைச் சினந்துதைத் திழுத்துத் தள்ளத்
               துவ்விய விருப்பு முள்ளுந் தோட்டியு மமையப் பெற்ற
               செவ்விய புறங்கா டொன்று திண்ணிய காப்புச் செய்யும்.

         132.    அண்ணுதற் கரிதா யொன்னா ரஞ்சுமக் காவற் காட்டில்
               துண்ணெனக் கணையஞ் சாய்க்குந் துளையகைக் களிறு மொன்னார்
               மண்ணெனத் தறுகண் விஞ்சும் மறவரு மமைந்து நாளும்
               கண்ணிளை யிமைகாப் பேபோற் கடிமதில் காக்குந் தானே.

         133.   செம்பினா லியன்று வானத் திசைபுகூஉச் செறுநர் தொட்ட
               அம்பினாற் கடக்க வொண்ணா வருமையோ டகலந் திண்மை
               தம்பொரு ளென்ன வாய்த்துத் தருக்கிவந் தெடுத்து முற்றும்
               வம்பலர் வெருவு மும்மை மதிலர ணியன்ற மாதோ.

         134.   உண்பரு முரண கோட்டை யுட்புகத் திசைக ணான்கும்
               திண்பெரு கதவ வாயிற் றிகழுமத் திருவ வாயிற்
               கண்பொரு கிடங்கைத் தாண்டிக் கடக்கமூய் பலகை யஃது
               மண்புக லொழிந்த போது வாயினு ளிழுத்துக் கொள்வர்.

         135.   வலிமிகு முதிர்காழ் கொண்ட மரம்பல விணைத்துச் செய்த
               நிலவுகா னிலவு மந்த நிலவுகா லெனுநீள் வாயின்
               கலியித ழதுவா மெஃகுக் கதவுநின் றணுகு மொன்னார்
               வலியெலாந் தொலையத் தானவ் வலிகொடு நிலவு மம்மா.

         136.   கழிமிகு வலியின் மேய கதவினுட் புறத்தீர் பாலும்
               எழுமர நிலவு மந்த வொழுக்கத விடைசீப் பென்னும்
               செழுமரந் துலாவின் மீது திகழுமக் கதவி னுள்ளே
               முழுவலி மல்லர் நாளும் முனைப்பொடு காப்பர் மன்னோ.
-------------------------------------------------------------------------------------------
         131. துவ்விய - வலிய. இருப்புமுள் - நெருஞ்சிமுட்போல இரும்பில் செய்து
நிலத்தில் பரப்பிவைக்குமுள். தோட்டி - இரும்புக் கொக்கி; முளையடித்துக்
கட்டிவைத்திருக்கும்; பகைவர் காலையிழுத்துக் கீழே தள்ளும். 132. கணையம் - யானை
கட்டுந் தூண். 134. உண்புஅரு - அழிக்கமுடியாது. வாயில் கண்பொருகிடங்கு - வாயிலின்
கண் போன்ற கிடங்கு. 135. காழ் - மர வைரம். கலி - ஒலி. 136. எழு - கதவுக்குப்
புறத்தே நாட்டப்படுந்தூண். சீப்பு - குறுக்குமரம். துலாம் - துலாக்கட்டை அதாவது,
சீப்புக் கீழே விழாதபடி எழுவுக்கும் கதவுக்குமிடையில் குறுக்காக இடும் தடைக்கட்டை;
இது எழுவில் உள்ள துளையில் பாய்ச்சப்பட்டிருக்கும்.