பக்கம் எண் :


162புலவர் குழந்தை

   
        137.    வாயிலி னிரண்டு பாலும் வலிமிகு நிலவின் பக்கம்
               ஆயதிண் சுவரி னூடே யமைந்தபே ரறைக ளந்த
               வாயினுட் புகுதுந் தெவ்வர் மண்பட நுடலு மாண்மை
               மேயபன் மறவ ரோடு மிகும்பல கருவி கொண்டே.

        138.    அம்மதிற் சுவர்மு கட்டி லருமுரட் பதண மென்னும்
               சும்மைகொள் மதிலுள் மேடை சுற்றினு மமைந்தி ருக்கும்
               அம்மதி லுண்மே டைக்கோ ரணியர ணெனப்பு றத்தே
               கம்மியல் வலிய சுற்றுச் சுவரது காப்புச் செய்யும்.

        139.    வல்லிய மதிலுள் மேடை வளைவிலுப் பொறியுங் கோலும்
               கல்லுமிழ் கவண்வெந் நெய்யுங் கருவிரற் குரங்கும் வேலும்
               கல்லிடு கூடை காய்பொன் னுலையொடு கணையங் குத்தம்
               புல்லிய புழையும் வாளும் புதைகவை கழுவி னோடே.

        140.    ஆண்டலை யடுப்பந் தோய்பா கடுகுழி சியுங்கொல் லேறும்
               தூண்டிலுந் தொடக்கு மொன்னார் தொடுகைகுந் தூசியோடு
               தீண்டுநூற் றுவரைக் கொல்லி சென்றெறி சிரலுந் திண்ண
               பாண்டிலும் விழுங்கு பாம்பும் பணைபன்றி களிறோ டாடும்.
------------------------------------------------------------------------------------------
        137. நுடலும் - கொல்லும். 138. சும்மை - ஒலி. கம்இயல் - தொழிலமைந்த. 139.
வளைவிற்பொறி - வளைந்து அம்பெய்யும் விற்பொறி. கோல் - குத்துக்கோல்.
கல்உமிழ்கவண் - கல் வீசுங் கவண். வெந்நெய் - காய்ச்சி ஊற்றும்நெய். கருவிரல் குரங்கு
- கரிய விரலையுடைய குரங்குப் பொறி. காய் பொன் உலை - செம்பு முதலியவற்றை
உருக்கும் உலை. கணையம் - வளைதடி. குந்தம் - ஈட்டி. புழை - வெந்நீரையும், தீயையும்
வீசுங் குழாய். புதை - அம்புக்கூடு. கவை - கழுத்தில் கொடுத்துக் கீழே தள்ளும்
இரும்புக்கவை. கழு - இருப்புலக்கை. 140. ஆண்தலை அடுப்பு. ஆண்மகன் தலைபோல
மூன்று அடுப்புப் போல் இணைந்துள்ளது. பாகு அடு குழிசி - எண்ணெய் காய்ச்சவும்,
செம்பு உருக்கவும், சாணி கரைத்துக் காய்ச்சவும், அவை ஊற்றி வைக்கவும் ஆன
மிடாக்கள். கொல்ஏறு - எருத்துப் பொறி. தொடக்கு - கழுத்தில் மாட்டியிழுக்கும் சங்கிலி.
நூற்றுவரைக்கொல்லி - ஒரேவீச்சில் நூறு பேரைக் கொல்லும் பொறி. சிரல் - மீன்
கொத்தி. பாண்டில் - கேடயம். பணை - மூங்கில் போன்ற இரும்புக் கம்பிகள்.