141. புலிகுடப் பாம்பு புள்ளுப் பொறியொடு தள்ளி வெட்டி வலியரி நூலி னோடு மற்றுமிவ் வகைய வான பலவகைப் பொறியி னோடும் பல்வகைக் கருவி யோடும் ஒலிபடைக் கொட்டில் போல வுரனொடு விளங்கு மாதோ. 142. அம்மதி லுள்மே டைக்கீ ழம்பெயுந் துளைகள் வாய்ந்த எம்மையுங் குறைவொன் றில்லா வேப்புழை ஞாயில் மேவும் இம்முறை யுறுப்பு மேய விடையக மதில்க ளான மும்மையு மகழி சூழ மொய்ம்புடன் விளங்கு மன்னே. 143. பகைபட வகன்றாழ்ந் தாயம் படீஇயவக் கிடங்கி னாப்பண் மிகைபடக் குறைவி லாது விளங்குபல் பொருள்க ளோடு வகைபட வமைந்த மும்மை மதிறழீஇத் திகழுங் கோட்டை தொகைபடக் கடலி னாப்பண் டோன்றுநீர்க் கலம்போற் றோன்றும். 144. அகமதிற் குலத்தின் பாங்க ரரசொடு கிளையும் வாழும் அகமிடைப் படுமூ ரின்க ணமைச்சரோ டனையார் வாழ்வர் தொகுவலிப் புறவே லிக்கண் டோய்வளப் புறஞ்சே ரிக்கண் வகைபடச் சிறந்த மற்றைக் குடியெலா மொருங்கு வாழும். 145. பாடுநர் வருக பாடும் பாட்டியர் வருக பல்கூத் தாடுநர் வருக நாற்பா வறைகுநர் வருக வென்றே நீடுறு நெடுவான் றாழ நிமிர்ந்துள கோயின் மாடத் தேடெழுந் தாணி மேய விருந்தமிழ்க் கொடிகை காட்டும். 146. இன்னமும் மதிலி னாப்ப ணிலங்கிடு மாடக் கோயில் மன்னவர் மன்ன ரான மாபெருந் தலைவ ரெல்லாம் தன்னைநேர் தமிழை யந்தத் தமிழ்பயில் தமிழ கத்தை அன்னைபோ லினிது காத்தே யரசுவீற் றிருந்தா ரம்மா. |
தமிழகக் காண்டம் முற்றிற்று. |
---------------------------------------------------------------------------------------- 141. தள்ளிவெட்டி - மதில்மே லேறு வோரைக் கீழே தள்ளவும் வெட்டவும் ஆன கருவி. அரிநூல் பொறி - உடலை அறுக்கும் நூல் போன்ற பொறி. கருவி - கைக்கொடு தாக்குவது. பொறி - தானே இயங்கும் விசைகொடு தாக்குவது. இம்மூன்று பாட்டுக்களினும் கூறிய கருவிகளும் பொறிகளும் மதில்மேல் ஏறும் பகைவரைத் தடுத்தற்கும் அடர்த்தற்கும் மதிலுள் மேடையுள் உள்ளவையாம். இவற்றின் பயனை மதிற்போரில் காண்க. 142. ஏப்புழை ஞாயில் - அம்பெய்யும் துளைகளையுடைய அறை. 143. ஆயம் - முகில். நீர்க்கலம் - கப்பல். 144. குலம் - கோயில். வேலி - மதில். |