பக்கம் எண் :


இராவண காவியம் 165

   
         5.     தமிழென ஆசான் சொல்லத் ததும்பிய மாலை வாயால்
               தமிழ்மொழி யென்னும் பின்னும் தமிழ்மொழி என்ன எந்தாய்
               தமி்ழ்மொழி யெமது சொந்தத் தாய்மொழி யென்னும் பின்னும்
               தமிழக மென்ன எங்கள் தாயகம் என்னு மாதோ.

         6.     அமிழ்துணும் என்னில் அன்னை அப்பவே தமிழுண் டேனிவ்
               வமிழ்துவேண் டாம்போ வென்னு மமிழ்தது தமிழ்தா னென்ன
               அமிழ்தமிழ் தமிழ்தா மன்னாய்! ஆமது தமிழ்தா னென்னும்
               தமிழ்தமிழ் தாக வுண்டு தமிழ்மகன் வளரு மாதோ.

         7.     ஏடுகை யெடுக்கு மவ்வேட் டிதழ்கையில் விரிக்கும் பெண்ணைக்
               கூடுகை யடுக்கும் செங்கோற் கொள்கையிற் பிடிக்கு மன்னை
               நாடுகை எழுதும் ஆயம் நண்ணுகை நோக்கும் நோக்கி
               ஆடுகை தவிர்ந்த தென்கொலருந் தமிழ்க் கொடியே யென்னும்.

         8.     இன்னண மாசான் சொல்வ தியல்பினிற் கேட்டுங் கேட்ட
               பொன்னெனப் பொலியு மேட்டிற் பொருந்தவே யெழுதி யுந்தான்
               தன்னைநேர் தானே யான தனித்தமிழ் மொழியைக் கற்று
               மன்னவர் மன்ன னாளும் வரிசையிற் பயிலு மன்னோ.
-------------------------------------------------------------------------------------------
         6. அமிழ்து - பாலும் சோறும் பிறவுணவும். தமிழ் து அமிழ்து ஆக - தமிழ்
உண்ணும் உணவாக. து - உண்ணுதல். 7. இப்பாட்டு சிலேடை - 1. ஏடு - சுவடி. இதழ் -
தனியேடு. பெண்ணைக்கூடு - பனையோலையால் செய்த எழுத்தாணிக் கூடு - பெண்ணை
- பனை. கை அடுக்கும் - கையின் கண் வரும், எடுக்கும். அன்னை நாடுகை - தமிழ்.
ஆயம் - கயிறு. ‘தமிழ்’ என எழுதிக் கயிறு கோத்துள்ள துளைக்கு எழுத்தாணி வரவே,
அவ்வாறமைந்துள்ள தமிழ்க் கொடியை நினைத்து இவ்வாறு கூறினானென்க. 2. கைஏடு
எடுக்கும் - கையாகிய மலரை எடுக்கும். அ ஏடுகை இதழ் விரிக்கும் - அம்மலர் போன்ற
கையின் விரல்களை விரிக்கும். பெண்ணை - தலைவியை. கூடுகை அடுக்கும் - கூடுதற்கு
அருகணையும். செங்கோல் - நேரான தொய்யில் எழுதுங் கோல். கொள்கையில் - பிடிக்கு
முறைப்படி. அன்னை - செவிலித்தாய். நாடுகை - தொய்யில். தொய்யிலைக் கண்டு
கூட்டமுண்டென்று ஆராயுமென்க. தொய்யில் - தோளில் எழுதும்கோலம். ஆயம் -
தோழியர் கூட்டம். ஆடாமல் நிற்பதேன் பெண்ணே என்னும். தமிழ்க்கொடி -
தமிழ்ப்பெண், இனிமையான பெண்.