பக்கம் எண் :


166புலவர் குழந்தை

   
          9.    அலகுறு மெண்ணோ டெண்மை யாமெழுத் தோடின் சொல்லும்
               இலகுசெம் பொருளு மான வியற்றமிழ்க் குரிய வாகிப்
               பொலியிலக் கியமு மத்தைப் பொருந்திலக் கணமு மான
               பலபல நன்னூ லாய்ந்து பழுனிய வறிவின் மிக்கான்.

          10.   படர்தரு நந்தம் முன்னோர் பயின்றநற் பழக்க மான
               நடைமுறை தன்னை யின்னும் நம்மருந் தெரியச் செய்தே
               கடைமுறை போய மாதொல் காப்பியக் கடலை மாந்தி
               மிடைதரு புலனீர் தாங்கி மேக்கெழு முகிலை யொத்தான்.

          11.   பண்ணொடு திறமு மான பல்வகை யராக மேய
               எண்ணிய லிசையை யவ்வவ் விலக்கண வரம்பு மீறாக்
               கண்ணிமை புருவ மேறாக் கழுத்தசை யாபல் தோன்றா
               உண்ணிய முறையாக் கற்றே யோரிசைப் புலவ னானான்.

          12.   ஆணிமூ யலவன் கண்ணை யவிர்விளக் கொளிகொள் போர்வை
               பூணியே வறுவாய்ப் பத்தர் பொலந்திவ வொடுவண் கோடும்
               பேணியே நரம்பும் பண்ணிற் பிறங்குநால் வகைய நல்யாழ்ப்
               பாணரோ டொருங்கு நாளும் பயின்றியாழ்ப் பாண னானான்.

          13.   பற்பல வகைய வாகப் பாகுபா டுற்ற கூத்தும்
               சொற்படு பொருட்க ருத்துத் தோன்றுமெய்ப் பாடுந் தோன்றப்
               பொற்படு தாளத் தோடு பொருந்திய நடிப்புங் கூடக்
               கற்பன வெல்லாங் கூத்தி கண்டுவெள் கிடவே கற்றான்.

          14.   ஏடது கைவி டாதே யெனுமொழி கடைப்பி டித்தே
               நாடொறுங் கற்றற் கேற்ற நன்னெறிப் படியே கற்றுப்
               பாடியிற் புலவர் மெச்சப் பண்ணியற் புலவர் நச்ச
               ஆடியற் புலவ ரச்ச வருமைமுத் தமிழுங் கற்றான்.
-------------------------------------------------------------------------------------------
          10. படர்தல் - பரவுதல். கடைமுறை போதல் - முடிதல். மேக்கு - மேல். 11.
பண் - இசை. திறம் - இசைக்கூறுபாடு. அராகம் - இசையறுத்துப் பாடுதல். எண்இயல் -
அளவுபட்ட உண்ணிய - உள்ளத்திற்பதிய. 12. அலவன் - நண்டு. நண்டுக்கண் போன்ற
ஆணித்துளை. வறுவாய் - நாவில்லாத வாய். பத்தர் - யாழ்த்தலை. திவவு - வார்க்கட்டு.
நால் வகையாழ் - பேரியாழ், சிற்றியாழ், செங்கோட்டியாழ், சுறவ யாழ்.