பக்கம் எண் :


இராவண காவியம் 167

   
          15.   இருவகைக் கைகோ ளாக வியலகப் பொருளும் நேரிற்
               பொருவகை யொழுக்கஞ் செய்கை பொதிபுறப் பொருளு மான
               பொருளதி கார முற்றும் பொருந்தவே கற்று மக்கட்
               கொருவனா யுவமை நீங்கி யுயர்ந்துமேம் பட்டா னன்றே.

          16.   பறையொடு குழலும் யாழும் பண்ணமைத் தியக்கந் தூய
               முறையொடு பாட்டாட் டோடு முடித்திடுந் திறமுங் கற்று
               மறைபடு பொருளில் லாது மனமொடு கையொன் றாக
               இறையெனுந் தலைமைக் கேற்ப இறைவனாய் விளங்கி னானே.

          17.   அறம்பொரு ளின்ப மென்ன வாயமுப் பாலி னன்னூற்
               றிறம்படக் கற்றுச் செங்கோன் முறைமையுந் தெளிந்த மேலும்
               மறம்படு பொருணூலெல்லாம் வகைபடக் கற்றே யாண்மை
               நிறம்பட வுயிரை யோம்பும் நிறம்படப் பொலிந்தான் மாதோ.

          18.   தலையிடைக் கழகத் தாய்ந்து சான்றவர் தொகுத்து வைத்த
               அலகிலாத் தமிழ்நூ லெல்லா மறிஞரோ டொருங்கி ருந்து
               நலமுட னாய்ந்தே யவ்வின் நற்பொருள் தெளிந்து மும்மைப்
               புலவனாய்ப் புலவர் போற்றப் பொருளெனப் பொலிந் தானம்மா.

          19.   முந்தையோர் தேடி வைத்த முழுமுதற் செல்வ மான
               செந்தமிழ் நூல்க ளெல்லாந் தெளிவுறக் கற்றுத் தேர்ந்து
               தந்தையுந் தாயு மான்ற சான்றவ னென்று வக்க
               மைந்தனுங் கண்டு தானு மனமகிழ் பூக்கு மாதோ.

          20.   இன்னணந் தமிழர் கோனு மியலிசை யொடுகூத் தென்னும்
               துன்னுமுத் தமிழுங் கற்றுத் துகளறத் தேர்ந்த தொன்றோ
               என்னினு மினிமை யான வேழிசை யமைந்த தான
               தன்னிசை தழுவி னானோர் தமிழிசை நூலுஞ் செய்தான்.
 
கலிவிருத்தம்
 
          21.   வில்லுந்தொடு நாணும்படு விசையும்படு திசையும்
               புல்லும்படு கணையுந்தொடை புணரும்பல குணமும்
               மல்லுங்கதிர் வேலும்பொரு வாளுந்தடு தோலும்
               கல்லும்படி தாயின்புறக் கற்றேதெளி வுற்றான்.
-------------------------------------------------------------------------------------------
          15. இருவகைக் கைகோள் - களவு, கற்பு. 17. நிறம் - மார்பு. நிறம்பட -
இயல்பு பொருந்த. 21. நாண் - கயிறு. தொடை - அம்பு தொடுத்தல். தோல் - கேடயம்.