28. ஐயைமில் காட்சியா னறிஞர் நாப்பணான் கையுடைப் பொருள்பிறர் கைய தாக்குவான் வையகத் தீயென வழங்கு மாண்மையான் பையகத் தேபொருள் பார்க்குந் தூய்மையான். 29. உடனுறு துணைபகை யோடு சேறினும் கடலெனப் பகைமதில் கவிந்து கொள்ளினும் படையிழந் துடலுநர் பாடி தங்கினும் அடல்குறிக் கினுங்கலங் காத நெஞ்சினான். 30. குடிபழி யஞ்சுசெங் கோலன் மெய்ந்நெறி தொடுதுலை நாவெனச் சூழுஞ் செம்மையன் படுபயன் வேட்டிடாப் பகலின் பண்பினன் நெடுநிலப் பொறையினன் நிறையின் காவலன். 31. அன்னைபோல் மன்னுயிர்க் கருளு மன்னினன் தன்னையே தான்பொருந் தனியொ ழுக்கினன் முன்னையோர் போற்றிய முறைபு ரப்பவன் பின்னையோர் கடைப்பிடி பிறங்குஞ் சீர்மையான். 32. அன்புட னுலகின ரரசன் காப்பினாற் றுன்பிலா தின்னலந் துய்ப்ப ராதலான் மன்பதை களுக்குடல் வாட்கை மன்னனே என்பதை யுணர்ந்ததற் கேற்பக் காப்பவன். 33. சான்றவ ராக்கிய தமிழின் பாவலன் ஆன்றவ ராக்கிய வறத்தின் காவலன் ஈன்றவ ராக்கிய வியல்பின் மேவலன் போன்றவ ராக்கிய புரப்பின் மாவலன். 34. தாய்மொழி தாயினுந் தகவிற் போற்றுவன் ஆய்மொழி யாளர்த மன்புக் கேற்றவன் காய்மொழி யாவதுங் கடிந்து மாற்றுவன் வாய்மொழி தப்பிடா வகையி லாற்றுவன். ------------------------------------------------------------------------------------------- 28. காட்சி - அறிவு. வை - வைக்கோல். பை அகத்தே பார்த்தல் - சுருக்குப் பையைத் திருப்பிப் பார்ப்பதுபோலப் பொருள்களை உள்ளுற ஆராய்தல். 29. உடலுநர் - பகைவர். 30. துலை - தராசு. நிறை - அடக்கம். 32. மன்பதை - மக்கள். 33. போன்றவர் - தன்போன்ற முன்னோர். | |
|
|