பக்கம் எண் :


இராவண காவியம் 171

   
           2.   மைபட நீர்மலி வானின் மீவளச்
               செய்பட வாக்கிய செந்நெற் செம்பயன்
               தைபட உழைப்பினைத் தகைய தாக்கியே
               கைபட வுழவர்கள் களிப்பின் மிக்கனர்.

           3.   நிலவள மாயசெந் நெல்லோ டேனைய
               பலவகைக் கூலமாம் பயன்கைக் கொண்டவர்
               பொலிவுற வேபுதுப் பொங்கல் வைத்துமே
               ஒலிமிக விழவயர்ந் துவப்பின் மிக்கனர்.

           4.   காதலிற் கலந்துளங் களித்த காதலர்
               போதுறு குழவிகண் டுவத்தல் போல்வயல்
               மீதுறு விளைவுகொள் மேழிச் செல்வர்கள்
               பேதுறு களிப்பினைப் பேச வேண்டுமோ.

           5.   உழைப்பவர் தங்களுக் கோய்வு வேண்டலான்
               மழைப்பய னுதவிய மலையைக் கண்ணுறத்
               தழைப்பவ ருளத்தொடு தானுந் தூதனாய்
               விழைப்பொடு நடந்திள வேனில் வந்ததே.

           6.   இலைவளம் வாய்ந்துகூர்ந் திலகும் மேல்வளம்
               சிலைவளம் வாள்வளஞ் செறிந்து செந்தமிழ்க்
               கலைவளங் கண்டுளங் களிக்கும் சிந்தையான்
               மலைவளங் கண்டிட மனத்தி னெண்ணினான்.

           7.   தானினை கருத்தினைத் தமிழர் காணுற
               வானினம் வெருவிட வண்ட ரோடுமொய்
               தேனின மருவிடச் செறியு மூவெறி
               யானையின் மிசைமுர சறைவித் தானரோ.
-------------------------------------------------------------------------------------------
           2. தைமாதத்தில் உழைப்பின் பயன் கைபடக் களித்தனர். செய் - வயல். 4.
பேதுறுதல் - மயங்குதல்; தெளிவற்ற களிப்பு. 5. விழைப்பு - விருப்பம். இளவேனில் -
சித்திரையில் தொடங்கும். மாசி பங்குனியாகிய பின்பனிக் காலமும் மலைச்செலவுக்
குரியதாம். 6. இலை - வேலின் இலைவடிவான தலை. சிலை - வில். 7. வண்டு - ஆண்
வண்டு. தேன் - பெண் வண்டு. மூவெறி - வாய் மூக்கு குறிவழி யொழுகும் வெறிநீர்.