பக்கம் எண் :


172புலவர் குழந்தை

   
           8.   முரசறைந் துரியவன் மொழிந்த நாள்வர
               அரசரு மமைச்சரு மனைய செல்வரும்
               வரிசையி னுயர்தமிழ் மக்கள் யாவரும்
               அரசவை யிதுவென வணியின் மேயினர்.

           9.  கரியரும் பரியருங் காலிற் சென்னரும்
               பெரியருஞ் சிறியரும் பெருங்கட் சிற்றிடைக்
               கருங்குழன் மகளிருங் கணவன் மார்களும்
               அருகுறு சிறுவரு மாக மேவினர்.

           10.  புலவரும் பாணரும் பொருநர் யாழரும்
               பலவகைக் குழலரும் பறையர் கூத்தரும்
               சிலைநுதல் விறலியுந் தீஞ்சொற் பாட்டியும்
               மலைவளங் கண்டிட வந்து கூடினர்.

           11.  நின்றிருந் தேத்திடு நிலைகொள் மூவரும்
               ஒன்றிடு நாழிகை யோர்ந்து சொன்னரும்
               அன்றொழித் துயர்காணக் காய ரோடுடன்
               துன்றுமெய் காப்பரும் வந்து சூழ்ந்தனர்.

           12.  மறவரும் மறவரின் மனையுந் தாயரும்
               சிறுவரு முறவொடு சிறந்த நண்பரும்
               இறைமக னிலங்கையு மிடங்கொ டாதெனப்
               புறமதிற் புறத்தினும் போந்து மொய்த்தனர்.

           13.  வாழ்கநந் தாய்மொழி வாழ்க நந்தமிழ்
               வாழ்கநந் தாயகம் வாழ்க நல்லறம்
               வாழ்கநந் தலைமகன் வாழ்க வோவென
               ஆழ்கட லொலியினு மார்த்த ரெங்கணும்.

           14.  தோறுளை நரம்பெனத் தொகுதி பட்டுள
               மாறியல் கடந்தநன் மங்க லத்தவாய்
               ஓறகு பல்லிய மொலிப்பத் தேவியை
               நாறணி தாரணி நாளை யொத்தவே.
-------------------------------------------------------------------------------------------
           10. பொருநர் - பிறர் கோலமிட்டு நடிப்பவர். விறலி - கூத்தி. பாட்டி -
பாடுபவள். 11. நின்றேத்துவோர் - சூதர். இருந்தேத்துவோர் - மாகதர். இருமையு
மேத்துவோர் - வேதாளிகர். அன்றுதல் - மாறுபடுதல். கணக்காயர் - ஆசிரியர். 14.
தோல்துளை நரம்பு - தோற்கருவி, துளைக்கருவி. நரம்புக்கருவி. ஓல் - ஒலி.
நாறுஅணிதார் - மணம்பொருந்திய அழகிய மாலை.