15. அராவண விடமருண் டகலுஞ் சாயலார் பராவண மெனுமிசைப் பாட்டின் கூட்டொலி தராவண வியவகத் தமிழர் தங்களுக் கிராவண னிவனென வியம்புக் காலுமே. 16. எங்கணுந் தமிழ்க்கொடி யீட்ட மூய்தர மங்கல வொலிதலை மயங்கு மாயிடை தங்களைத் தாநிகர் தமிழ ரார்ப்புறத் திங்கள்வெண் குடைநிழல் சிறப்பத் தோன்றினான். 17. கண்டன னிறைவனுங் கண்க ளிக்கவே தண்டமிழ்க் கொடிக்குமுன் றலைவ ணங்கினன் கொண்டனன் மகிழ்ச்சியெங் குலத்த ராகிய வண்டமிழ் மக்களே வருக வென்றனன். 18. இவனம திறையெனு மீங்கு நின்றுபோய் அவனம திறையெனு மாங்க கன்றுபோய் உவனம திறையெனு மூங்கு வேறிலா திவனவ னுவனம திறையென் றார்க்குமே. 19. தொக்கவ ரின்னணந் தொகைஇய வின்புறீஇ ஒக்கலுந் துணைவரு முறவு மாகிய தக்கதந் தாய்மொழி பேசுந் தண்டமிழ் மக்களு மிறைவனும் வழிக்கொண் டாரரோ. 20. பாடுவர் தமிழிசை பாடி யின்புறீஇ ஆடுவர் தாமுநா டகரென் றார்த்தெழீஇ ஓடுவ ருவப்பினா லோடி வந்துபின் கூடுவ ராய்த்தமி்ழ்க் கூட்டஞ் செல்லுமே. ------------------------------------------------------------------------------------------- 15. அரா - பாம்பு. அணவிட - நெருங்கிட. சாயல் - மயிற் சாயல். பராவணம் - வாழ்த்தப்படும் பொருள். தரு - இசைப்பாட்டு. அணவிய - பொருந்திய. பராவணம் எனும் இவன் தமிழர்க்கு இராவணன் என - பரவப்படும் பொருளாகிய இவன் தமிழர்க்கு மிக்க உரிமையுடையவன் என்று. இயம் - வாச்சியம். 16. மூய்தர - மூட. தலைமயங்கல் - கலத்தல். 18. உவன் - நடுவிலுள்ளவன். அணித்தும் சேய்த்தும் நடுவும் கண்டோர் கூற்று. ஊங்கு - எல்லா இடத்திலும். 19. ஒக்கல் - சுற்றத்தார். துணைவர் - உடன்பிறந்தார். | |
|
|