21. இன்னண மாயவ ரீறி லின்பராய் அன்னவ ராழ்கட லகழைத் தாண்டியே பன்னலந் தோயவன் பாயி லங்கையாம் பொன்னகர் பின்னுறப் போயி னாரரோ. 22. யாணரும் பழையது மியைந்தி யாவினும் மாணருந் தலைநகர் வாழ்த்திப் போர்த்தொழில் பூணரும் புனைதமிழ்ப் புலவ ரோடியாழ்ப் பாணரும் வழிநடை பாடிச் செல்வரால். | ஷ வேறு வண்ணம் | 23. பருகப்படு மடுவிற்பல பகுதிப்படு கரையில் இருவப்படு சிறுகொக்கின மிரையிற்பட வஞ்சி அருகிற்படு வயலிற்புகி யமையச்சிறு கயல்கள் மருவப்படு பழனப்புனல் மருதத்திணை கண்டார். 24. இலையைப்பெரு சிறுகால்கிழித் திடநெக்குறு வாழைக் குலையுற்றொரு தலைகாட்டுபு குமரிப்புன லுண்டு பொலிவுற்றெழு கழையிற்படு பூவாலினை யாட்டக் குலவப்புறு மருதத்திணை குதிரைக்குல மானும். 25. ஏனின்னமு மினிமைத்தமி ழினிமைப்படு கன்னல் தானன்னது தந்தோரிறை வந்தானவர் சார நானின்னமிழ் தேயோவவர் நலியாதிள வேனில் கானண்ணிய பூவாயவெண் கவரிக்குலம் வீசும். 26. தண்டாமரை மலரைத்தமிழ் நீராடொரு தையல் கண்டேமுக மெனவேயிரு கையான்மறை தருமவ் வண்டார்குழல் முகமோர்முழு மதியென்று மயக்கங் கொண்டேயளி முரலுஞ்செழு குமுதக்குல மலரும். ------------------------------------------------------------------------------------------- 22. யாணர் - புது வருவாய். 24. கால் - காற்று. நெக்குறுதல் - கிழிபடல். கழை - கரும்பு. குலவு அப்பு - மிக்க நீர். 25. கன்னல்தான் - கரும்பானது. அன்னது தந்தோர் - தனக்குந் தமிழாகிய இனிமையைத் தந்தோர். தமிழர் பேசிய தமிழாற் கரும்பு இனிமையடைந்து அதற்காக உதவுகின்றதென்க. அமிழ்து - சாறு. கான் - மணம். அமிழ்தேயோ - சாறுமட்டுமா. 26. தமிழ்நீர் - இனிமையான நீர். மதியைக் காணின் குமுத மலர்கள் மலரும்.) | |
|
|