27. தெங்கம்பொழில் கண்டன்பொடு திருகித்தரு மிளநீர் பங்கொன்றவ ரைந்தாறெனப் பருகக்குலை வாழை இங்கெம்மினு மேலோவுணு மெனவேகுலை குலையாய்த் தொங்கும்பழ முண்டேகளி கொண்டேவழி யுண்டார். 28. பொன்னைப்புரை புன்னைச்சிறு புதுவீதரு பொடியால் தன்னைக்கொழி பொன்னாக்கியே தமிழ்தந்திடு தமது மன்னைப்பெரு மன்போடெதிர் வரவேற்கவே கானல் நெந்நற்படு புலவற்றிடு நெய்தற்றிணை கண்டார். 29. சங்கந்தரு தமிழுண்டது தவறென்றுதெ ளிந்தேன் இங்கொன்றிய விறையேயினி யென்றுந்தலை வையேன் அங்கன்றது கொண்டேபொறுத் தருள்கென்றொலி கடலும் சங்கந்தரு முத்தந்திறை தருமாயிர மடங்கே. 30. தப்புக்கிறை யாகக்கடல் சங்கந்தரு முத்தம் ஒப்பித்தது முறையோவத னுரிமைச்சினை யான அப்புத்தெரு பொருள்கொள்கென வன்போடுயர் கழியும் உப்புத்தர வற்றேசின முற்றேவிடை பெற்றார். 31. பெருகாதலன் வரவேயெதிர் பெறுகாதலி மானக் கருவார்நறு மலருங்கனி கனியுங்கயி லேந்தி வருவீர்வரு வீரென்றெதிர் வரவேற்றிட வெதிர்கான் முருகார்நறு வீசூழிய முல்லைத்திணை புக்கார். 32. உள்ளத்தினை யுணர்வோடிய லுயிரீரு முகப்போர் கள்ளத்தினை யடையப்புடை கமழுஞ்சிறு கையால் வள்ளத்தினை யேந்தித்தரு மதியைக்கவர் தமிழப் புள்ளத்தனை யிசைபாடிடு பூப்பந்தரி ருத்தும். ------------------------------------------------------------------------------------------- 27. மேலோ - கொடையிற்சிறந்தவரோ. 28. பொடி - பூந்துகள். கொழிபொன் - பூந்துகள் கலந்த மணல். நெந்நல் - நேற்று, புலவு - புலால் நாற்றம். 29. (திறை) கொண்டு அன்று அது பொறுத்தருள்க. அன்று தமிழ் நாட்டையுண்ட குற்றத்தைப் பொறுத்தருள்க. 30. அப்பு - நீர். உற்று சின மற்று. 31. கருஆர் - கருப் பொருந்திய. முருகு - தேன். வீ - பூ. 32. இயல்உயிர் - இயங்குகின்ற உயிர். கள் அத்தனை அடைய - தேன் அவ்வளவையும் பெற. புடை - பக்கம். சிறுகை - பூந்தாள். வள்ளம் - பூவட்டில். மதி - அறிவு. புள் - வண்டு. உகப்போர் - காதலர். கள்ளம் - களவு. காதலர் இயற்கைப் புணர்ச்சி பெறப் பூப்பந்த ரிருந்து மென்றுமாம். | |
|
|