39. சோலைப்படு மருவிக்கொடி தூதாகவே தென்றற் காலைத்துணை யாகக்கொடு கணிமாமலர் தூவ மாலைப்படு குறிஞ்சித்தலை வருவீரென வேபைங் கோலக்கிளி வரவேற்கவே குறிஞ்சித்திணை யுற்றார். 40. கலையுற்றொரு பலவின்சுளைக் கனியைக்கொடு மந்திக் கிலையிட்டுமே யுணவேண்டிட விகல்விட்டது நின்ற நிலைவிட்டுமே வந்துண்டிட நீள்வால்மகிழ் மேற்கு மலையுற்றனர் தமிழுக்குயிர் வழங்குந்தமிழ் மக்கள். | ஷ வேறு வண்ணம் | 41. அறையிடை வீழ்தரு மருவி நீர்த்தொடர் இறைமக னெழினலத் தீடு பட்டுமே நிறைமலர்த் தொடையலை நெகிழ்ந்து நீள்மலைக் குறமகள் சூட்டிடுங் குறிப்பிற் றோன்றுமே. 42. இம்மென வொலிபட விழியு நீர்த்திரள் செம்மலைக் கண்டுளஞ் சிறப்புத் தன்னெழில் பொம்மலுற் றினிதினிற் பொலியப் போத்திடும் அம்மலை மகளின்மே லாடை மானுமே. 43. துன்றறை வீழ்ந்துறத் துவளு நீர்த்தொடர் குன்றவர் தம்மிளங் கொடிக்கு நன்றென வென்றெறி முரசினன் விரும்பிச் சூட்டிய மன்றலந் தொடையலை மானத் தோன்றுமே. 44. வீங்கிய சாரலின் மிசைய வேங்கையின் ஓங்கிய பூஞ்சினை யுதிர்த்த வொண்மலர் பாங்குள துறுகலின் பாங்கர் மூய்தர வேங்கையென் றிளம்பிடி வெருவி யோடுமே. ------------------------------------------------------------------------------------------- 39. கொடி - தொடர். கணி - வேங்கைமரம். மாலைப்படு - மாலைபோல் மலர்ந்து. அல்லது, மால் ஐ படு - முகில் மிகப் படிந்துள்ள. 40. கலை - ஆண்கருங்குரங்கு. இகல் - ஊடல். நீள்வால் - குரங்கு. 41. அறை - பாறை. நறை - தேன், மணம். 42. பொம்மல் - பொலிவு, பருத்தல். 43. துன்று அறை - நெருங்கிய பாறை. உற - மிக. 44. வீங்கிய - உயர்ந்த. துறுகல் - உருண்டைக் கல். | |
|
|