பக்கம் எண் :


178புலவர் குழந்தை

   
         45.    படக்கென யாக்கிளை யொடிக்கப் பாங்குறும்
               மடப்பிடி நடுக்குற மறித்து மற்றதன்
               இடத்துற வணைத்துநன் கினிதுண் டின்புறக்
               கடக்களி றூட்டிடுங் காட்சி காண்பரால்.

         46.    பேரிளங் கன்றினைப் பிடியும் யானையும்
               நீரிடை நிறுத்தியே நீண்ட கைகளால்
               சீரிய வுடம்பெலாந் தேய்த்துத் தேய்த்துமே
               பூரிநீ ராட்டிடும் புதுமை காண்பரால்.

         47.    இன்பொடு கைமக வினிது தூங்கவே
               பின்பொடு முன்பொடு பிடியும் யானையும்
               வன்பொடு கைகளால் வலியப் பற்றியே
               அன்பொடு வூசலாட் டயர்தல் காண்பரால்.

         48.    ஓங்கிய பாறையி னுயரத் தேறவே
               தேங்கிய பிடியினைத் திசைக்கை பற்றியே
               வாங்கவே தாயினீள் வாலைப் பற்றியே
               போங்குழக் கன்றதன் புதுமை காண்பரால்.

         49.    தடவரைக் கவரிடைத் தவிக்கும் வேங்கைகள்
               அடர்தரு பூஞ்சினை யரும்பி மேக்குறப்
               படரென நீண்டதம் பறிக்கை யாற்கொடு
               கடகநீ ரூற்றிடுங் காட்சி காண்பரால்.

         50.    ஒட்டிய கொடிகளா லோங்கு பூஞ்சினை
               கட்டியே நறுமணங் கமழும் பூக்களை
               இட்டுமே மந்திதன் னிளைய குட்டியைத்
               தொட்டிலிட் டாட்டிடுந் தோற்றங் காண்பரால்.
-------------------------------------------------------------------------------------------
         45. மடம் - இளமை. கடம் - வெறி. 46. பூரி - மிகுதி. 47. பின்பொடு
முன்பாடு - பின்னும் முன்னும். 48. திசை - நீண்ட, குழக்கன்று - இளங்கன்று 49. கவர் -
வெடிப்பு. தவித்தல் - வாடல். மேக்குறல் - வளர்தல். படர் - ஏவலாளர். பறி -
நீரிறைக்குங் கருவி. கடகம் - யானைக்கூட்டம்.