51. புல்லியே மரக்கிளை பொருந்த மந்திகள் வல்லிபோ லாடியக் கரையின் வாதுறீஇக் கல்லிடை யருவியைக் கடக்குங் காட்சியைக் கொல்லெனச் சிரித்துமே கூடிக் காண்பரால். 52. வீந்திட மந்தியும் மென்கட் பார்ப்பினை ஏந்தியே கடுவனு மினத்தர் கையிரீஇச் சாந்திருந் தறையிடை வீழ்ந்து சாதலைத் தீந்தமிழ்க் காதலைத் திருப்பிக் காண்பரால். 53. ஆகிய வகையெலா மனைப ழக்கிடக் கோகுல வரங்கிடைக் கூத்தி மானவே தோகையை விரித்திளந் தோகை யாடலை ஓகையோ டினிதுகண் டொருங்கு வப்பரால். 54. ஊகிய சாயல்கண் டுடம்பை நோக்குவர் தோகையைக் கண்டுதந் துகிலை நோக்குவர் ஆகுகண் கண்டய லார்கண் நோக்குவர் பாகினு மினியசொற் பாவை மாரரோ. 55. மருப்பொடு தூங்குகை வாங்கி யோங்குவான் பொருப்பென வருகரி பொன்றக் கோட்புலி பருக்கென மருப்பிடை பாய்தல் கண்டுமே சுருக்கென மறவர்கள் தோளை நோக்குவர். 56. சந்தகில் வேங்கையிற் சமைந்த கொத்தினால் சொந்தமீ தருவிநீர் தோய்த்து வீசியே செந்தமிழ் மழலைவாய் சிரித்துச் சீரிள மைந்தரும் மகளிரு மகிழ்ந்து செல்வரால். 57. மாணுறு முருகிய மழையி னார்ப்பவே கோணுறு குறிஞ்சியாழ் குழலொ டார்ப்பவே பாணர்கள் குறிஞ்சிவாய் பாடப் பாங்கினிற் காணுறு மிடமெலாங் கண்டு சென்றனர். ------------------------------------------------------------------------------------------- 51. வல்லி - கொடி. வாது - மரக்கிளை. உறீஇ - உற்று. 52. கடுவன் - ஆண்குரங்கு 53. கோகுல அரங்கு - அரசவை மேடை. ஓகை - மகிழ்ச்சி. 54. ஊகிய - பொருந்திய. ஆகுகண் - தோகையிலுள்ள கண். 55. மருப்பு - கொம்பு. வாங்கி - வளைத்து. பொருப்பு - மலை. 57. கோண் - வளைவு | |
|
|