பக்கம் எண் :


180புலவர் குழந்தை

   
         58.    வென்றெறி முரசொலி வெண்சங் கின்னொலி
               ஒன்றிய பறையொலி நரம்பி னுள்ளொலி
               மன்றலங் குழலொலி மறவ ரார்ப்பொலி
               குன்றொலி யொடுதொகு குமுறி யாத்தவே.

         59.    ஏடெழுத் தாணியா னியன்ற தாய்க்கொடி
               நீடிய வானிடை நிமிர்ந்து குன்றுறை
               வேடுவர்க் குரைத்திட விரைந்து முன்பறந்
               தோடுபைங் கிளியின மொத்துத் தோன்றுமால்.

         60.    இன்னபல் காட்சிகண் டினிய செந்தமிழ்
               மன்னவர் மன்னனு மற்றை யோர்களும்
               பொன்னென வேங்கைவீ பொலியுஞ் சாரல்விட்
               டின்னல மிகுந்தவோ ரிடத்தை மேயினார்.

         61.    குன்றுறழ் யானையுங் குதிரை யீட்டமும்
               வென்றியி னூர்ந்திடு விலங்கின் கூட்டமும்
               நின்றுயர் மரங்களி னிரல வாய்க்கொடக்
               குன்றமும் பாசறைக் கோலங் கொண்டதே.
 
கொச்சகம்
 
         62.    ஆடரங்குத் துயிலறையு மவைக்களமு மடைப்பளியும்
               பாடரங்கும் பலவகையாம் படைக்கலக்கொட் டிலும்பலியக்
               கூடமுஞ்செந் தமிழ்பயிலு கூடமொடு வகைவகையாப்
               பாடியமைத் திராவணனோ டொருங்கிருந்தார் பழந்தமிழர்.

         63.    தினைமாவுஞ் செந்தேனுந் தேமாவின் தீங்கனியும்
               இனியபல வின்சுளையு மின்சுவைய நறுங்கிழங்கும்
               சுனைநீரோ டைவனவெண் சோறுகறி யுங்குழம்பும்
               வினைவகைய வினபலவாம் விருந்துண்டு களித்தனரால்.

         64.    சந்தனத்தைப் பூசிடுவார் தக்கோலந் தின்றிடுவார்
               அந்துவர்வா யார்குழலுக் ககிற்புகையை யூட்டிடுவார்
               செந்தமிழைப் பாடிடுவார் சிறுபகடி யாடிடுவார்
               எந்தமிழோ ரிருப்பினுக்கிங் கேதுவமை கூறுவமே.
-------------------------------------------------------------------------------------------
         61. விலங்கு - கிடாய் முதலியன. நிரல - வரிகையாக. 62. பல் இயம் -
பலவகை இசைக் கருவி. 63. ஐவனம் - மலைநெல் 64. அம் - அழகிய. துவர் - பவளம்.
பகடி - விகடம். தக்கோலம் - வெற்றிலை பாக்கு.