65. வையுறைவேல் மாமன்னன் வந்துள்ளா னெனக்கேட்டு மையுறையும் மலைப்பொருளு மணப்பொருளு மாப்பறழும் கையுறையும் புள்ளினமுங் கனிபூந்தேன் கொடிகிழங்கும் கையுறையாக் கொடுபோந்து கண்டுவந்தார் குன்றவரே. 66. வந்தவரை யுடனிருத்தி வாழியரூங் கெனவாழ்த்தி முந்தையர்தம் மின்னுயிரின் முந்தையதாய் முறைபோற்றி வந்ததமிழ் மொழியான வழிவந்த தாய்மொழியை எந்தையரே போற்றிவரு கின்றீரோ வெனக்கேட்டான். 67. ஆமென்றோ ரவ்வளவே யடையாரைக் குடியோடிப் போமென்று வலிகாட்டிப் புகழ்பூத்த வரைத்தோளான் நாமன்றோ வுயிர்வாழ்வின் நல்வாழ்வுப் பயன்பெற்றோர் ஏமொன்று மலைவாணீர் குறையென்னோ வெனவுவந்தான். 68. மற்றவரும் பெருங்குன்ற வாணருட னளவளாய் உற்றநல மத்தனையு மொருங்கறியப் பரிமாறிச் சற்றுமன மகலாநந் தாய்வழி யெனக்கூறிக் கற்றவருங் கற்றவருங் கலந்துகளித் தனகளித்தார். 69. ஒத்தபிறப் பினராய வுயர்ந்தோங்கு மலைநாடர் வைத்தலைவேல் மாமன்னா வண்டமிழைத் தாய்மொழியா ஒத்தவெமக் கென்குறையோ வுடனுறையும் பெருவாழ்வை வைத்ததுவே யமையுமென வணக்கமுடன் விடைகொண்டார். 70. ஆங்கவர்சென் றதன்பின்ன ரழகியபன் மலர்கொய்தும் பாங்குடனே யணியணியாய் பலவிளையாட் டுகளயர்ந்தும் தேங்கியநீர்ச் சுனைகுடைந்தும் தெளிவெய்த மனக்கொண்டார் ஓங்குபெருஞ் செல்வத்தா லுலகோம்புந் தமிழ்நாடர். 71. பூங்கொடியின் பாடணைந்த பூங்கொடியார் கைபடவப் பூங்கொடியும் புறங்கொடுத்துப் பூங்கொடியா ரடிவணங்கும் பூங்கொடியே யதுவானாற் பூங்கொடியைப் புறங்கண்ட பூங்கொடியார்ப் பணியாத புகன்மறவ ருளரேயோ. ------------------------------------------------------------------------------------------ 65. வை - கூர்மை. பறழ் - குட்டி. கையுறையும்புள் - பழகின பறவை. கையுறை - காணிக்கை. 66. ஊங்கு - மிக. 67. ஏம் - காவல். 71. புகல் - வெற்றி. புறங்கொடுத்தல் - வளைத்துப் பூப்பறித்தல். | |
|
|