72. வேங்கையிண ரொண்பூவை வெடுக்கென்று பறித்தொருத்தி பாங்கொடியான் மகப்பெறவே பகைகொண்டு கைநீங்கி வேங்கையிடை யொதுங்கினையோ மெல்லரிப்பொன் சுணங்கெனவே ஆங்கெறிய வயனின்ற வவள்கொழுநன் நனிநக்கான். 73. காதலியின் விரலென்று கமழிதழிச் செங்காந்தட் போதினைத்தொட் டிடவொருவன் பொன்னாழி விரல்விரித்தப் போதினைத்தா வெனவவனப் புதுமையினாற் செம்மாந்தப் போதினையும் விரலினையும் பொரீஇக்கண்டு புறம்போவான். 74. தண்சுனைநீ லம்பறித்த தையலவை தம்மழகான கண்சுவைபோ மெழிலவெனக் கண்சிவந்து கைவிடுப்ப ஒண்கழலோன் றொழுதிரக்கு மொளியகல்கூம் பலர்காட்டிக் கண்கலங்கே லெனத்தணிந்து காதலனோ டாங்ககலும். | கலி விருத்தம் | 75. பொன்னெனப் பொலிவுறும் பூங்கட் செல்வரும் இன்னின விடந்தனக் கேற்ற திஃதெனத் தொன்னலங் கவினிய தொடையல் சூட்டியே அன்னமென் னடையின ரழகு காண்பரால். 76. கெண்டையுண் கண்ணியர் கிழவர் சூட்டிய தண்டமி ழிசையெலாந் தழுவித் தண்ணென வண்டினம் பாடுதே மலர்செய் பஃறொடை கொண்டொளிர் நறியபூங் கொம்பிற் றோன்றுவர். 77. ஊடலி னன்றியிவ் வொருவைக் காலையும் ஆடவர் பெண்டிருக் கடிமை யேயெனத் தோடணி குழையர்பூந் தொடையல் சூட்டியே பாடமை தலைவரைப் பணியச் செய்வரால். ------------------------------------------------------------------------------------------- 72. அரி - நிறம். சுணங்கு - மாதர் உடலில் படரும் தேமல். வேங்கைப் பூவைத் தேமலென மயங்கினாள். 73. செம்மாத்தல் - மிகக் களித்தல். 74. தொழுது இரத்தல் - காலடியில் கிடத்தல். கூம்புதல் - குவிதல். அழகிழந்து காலடியிற் கிடந்த கூம்பிய பழம்பூவைக்காட்டி இவையும் அவ்வாறாமெனச் சினம் போக்கினான். 76. கிழவர் - கணவர் தேம் - தேன். 77. தோடு - காதணி. குழை - காது. பாடு - பெருமை மாலையேற்கத் தலை வணங்குவரென்க. | |
|
|