பக்கம் எண் :


இராவண காவியம் 183

   
          78.   குறுநடைச் சிறுமியர் குற்ற பூக்களை
               நறுமலர்க் குழலுடை ஞாயர் தைஇத்தர
               மறுவறத் திகழ்தரு மரஞ்செய் பாவைக்குச்
               சிறுமணித் தொடைநனி சிறப்பச் சூட்டுவர்.

          79.   கும்பலி னின்றிரு கொடிய னார்செலீஇ
               அம்பல மெழிலுற வாடும் பாவைபோல்
               வம்பவிழ் மலருக மாறிக் கைபிடீஇத்
               தும்பிலி பறந்துகண் சுழல நோக்குவர்.

          80.   சந்தன நிழலிடைத் தமிழ மங்கையர்
               பந்தயம் வைத்துயர் பணையங் கைக்கொளப்
               பந்துவந் தாடலைப் பரணங் காத்திடும்
               செந்தினைக் குறத்தியர் திரும்பிக் காண்பரால்.

          81.   அறத்தினை வாழ்த்தியு மறத்தின் மீதமிழ்த்
               திறத்தியல் செம்மலின் றிறத்தை வாழ்த்தியும்
               சிறுத்திடைப் பெருத்தகண் செங்கை வெண்பலார்
               குறத்திய ரொடுதழீஇக் குரவை யாடுவர்.

          82.   தனித்தமிழ் வாய்ச்சியர் ததைந்த செந்தினைப்
               புனத்திடைப் பரண்மிசைப் பொருந்திக் கல்லெறிந்
               தினித்தசெந் தமிழிசை யிசைத்து நீக்கலான்
               உனித்ததை யினக்கிளி யோடுங் கூடுமால்.

          83.   ஒசிந்தநுண் ணிடைச்சிய ரொத்த காதலர்
               கசிந்ததேங் கொத்திடைக் கமழுங் கொத்துற
               இசைந்தளி தொடர்தர வியல்பின் யாத்தநற்
               பசுந்தழை தரவுடீஇப் பசந்து காண்பரால்.
-------------------------------------------------------------------------------------------
          78. குற்ற - பறித்த. ஞாயர் - தாயர். தைஇ - தொடுத்து. மணி - அழகு. 79.
அம்பலம் - ஆடரங்கு. வம்பு - மணம். உக - விழ. தும்பிலி - இருவர் கைமாறிப்
பிடித்துப் பம்பரம் போற் சுழன்றாடுதல். 81. குரவை - எழுவரேனும், ஒன்பதின்மரேனுங்
கைகோத்தாடுதல். 82. ததைந்த - செறிந்த. உனித்து - உற்றுக் கேட்டு. 83. ஒசிந்த -
வளைந்த. கசிந்த தேம் கொத்து - பூந்தேன் உருகி வழிந்துவந்து பட்ட தழைக்கொத்து.
கமழுங் கொத்து - பூங்கொத்து.