ஏடுகளின் மூலம் ஏற்பட்ட கேடுகளைக் களைந்து, இந்நாள் நினைவுக்கேற்ப, அவற்றினை ஆராய்ந்து, புது உருவாக்கித் தருவது. பழைய உருவிலே பற்றுக்கொண்டோருக்கு இது பயங்கரப் புயலாகத் தோன்றும். இதனை ஆக்கியோர் அறிவார், மனித இயல்பறிந்தோர் ஆச்சரியமும் கொள்ளார். இராம நவமி கொண்டாடும் நாட்களிலே, நாட்டிலே, இராவண காவியம் ஆக்கப்படுவது அதிசயம் என்று கருதிப் பயனில்லை, அறிவிப்பு என்று கொள்ள வேண்டும் - பழமை மடிகிறது என்பதற்கான அறிவிப்பு. ஜாரின் கொடுமை உண்டாக்கிய சூழ்நிலையேதான் ஒரு லெனின் தோன்ற முடிந்தது. தோன்றினதால்தான், யார் தேவகுமாரன் என்று தேயத்தினரால் வணங்கப்பட்டு வந்தானோ அவன், மக்களின் இரத்தத்தை உறிஞ்சிடும் பேயன் என்று ஏற்பட்டது. ஜார் இல்லையேல் லெனின் இல்லை; அவசியம் இராது. அஃதேபோல், இராமாயணத்திற்கு ஆக்கந் தேட முனைவோரும், சித்திரம் தீட்டிடுவோரும், சிறு கட்டுரை யாக்கிடுவோரும் இன்று புதுக் கூத்தாட முற்பட்டிருக்கவில்லை யானால், இக் காவியமும் எழுந்திராது. ஒன்றின் விளைவு மற்றொன்று - விளைவு மட்டுமல்ல - ஒன்றுக்கு மற்றொன்று மறுப்பு. இராமன் தெய்வமாக்கப்பட்டான்; இராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக, இராவணன் அரக்கனாக்கப்பட்டான். கோவிலுக்கு ஓர் உருத் தேவை என்பதற்காக, கொற்றவன் மகனாக மட்டுமே குறிக்கப்பட வேண்டிய இராமன் கையில், மகத்துவம் பொருந்திய கோதண்டத்தையும், இராம தூதனின் வாலுக்கு நினைத்த அளவில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும் கவி கற்பித்துக் கொண்டார். வாலும் வில்லும் வணக்கத்துக்குரிய பொருள்களாக்கப்படவே, தோள் வலியும் மனவலியும் படைத்த ஒரு மன்னன் மிலேச்சனாக்கப்பட்டான். இராமனுக்குச் செந்தாமரைக்கண் அமைத்தார் கவி; எனவே, இராவணன் கண்கள் செந்தழலை உமிழ்ந்தன என்று தீட்டலானார். அவருடைய நோக்கம், இராமனைத் தேவனாக்க வேண்டும் என்பது. அதற்கேற்றபடி கதை புனைந்தார். இராவண காவியம், முன்னாள் கவி, தம் நோக்கத்துக்காக இராவணன் மீது ஏற்றிய இழி குணங்களையும், கொடுஞ் செயல்களையும் களைந்தெறியவும், இராவணனுடைய தூய்மைக்கு ஆதாரமான பல புகலவும், அஃதே போல, இராமனுடைய குணம் செயல் ஆகியவற்றிலே காணக் கிடைக்கும் தவறுகளைத் தெளிவுபடுத்தவும் தோன்றிய நூலாகும். இராமன் கோவில் எங்கும் காணப்படும் இக் காலத்திலே, இம் முயற்சியில் ஈடுபட | |
|
|