2. முல்லை யேமுத லாகிய நானில முதலின் எல்லை யாகிய தமிழக முழுவது மியன்ற முல்லை மாநிலந் தனிலொரு முல்லையை யாண்ட தொல்லை யோர்வழி வந்தமா யோனெனுந் தூயோன். 3. முன்னை யோர்முறை புரந்தவா றேதனி முதலாய் அன்னை போலவு மப்பனைப் போலவு மருமைத் தன்னை போலவுந் தண்டமிழ்த் தாய்நனி யுவப்ப பொன்னை யோர்வறி யோன்புரப் பேயெனப் புரந்தான். 4. கருவி டத்திலே பொதுநலம் புரிதலைக் கற்றோன் உருவெ டுத்ததுந் தமிழையின் னுயிரெனப் பெற்றோன் ஒருவி டத்திலுந் தவறறி யாதுயர் வுற்றோன் திருவி டத்தொரு விடத்திருந் தான்றகு திருவோன். 5. சேர சோழருஞ் செந்தமிழ்ப் பாண்டியர் தாமும் மாரி போற்றமி ழகத்தைமா மன்னர்கீழ்ப் புரக்க மூரி யோர்முறை போகவே முறையொடு புரந்து சீரியல்திரா விடத்தொரு முல்லையிற் றிகழ்ந்தான். 6. எல்லை யற்றபல் வளமிகுந் தியல்திரா விடத்தில் அல்லை யுண்டுயர் குமரியின் வடகிழக் கமைந்த முல்லை நாட்டினற் றலைநக ராகிய முகிறோய் எல்லி வெள்குறு மாடநீள் முதிரையி லிருந்தான். 7. பூத்த முல்லைநன் னாட்டினர்க் கொருதனிப் புகலாய் ஆத்தொ கைக்குமப் பொருட்குமோ ரழிவில்பே ரரணாய்க் காத்து வந்தமா யோனெனுங் கலைவலோன் றேவி பூத்து வந்தளோர் நறுமணத் தமிழுயிர்ப் பொற்பூ. 8. அப்பொற் பூவினை யன்னைதந் தையருல கத்தில் ஒப்புக் கோர்பொரு ளின்றென வுயிரென வுயிரின் செப்புத் தானெனச் செப்பினைச் செய்பொரு ளென்ன மப்புத் தானறு மணியெனப் போற்றியே வளர்த்தார். ------------------------------------------------------------------------------------------- 3. தன்னை - அண்ணன். 5. மூரியோர் - முன்னோர். 6. அல் - இருள் 7. பூத்து உவந்தள். 8. செப்பு - சிமிழ். மப்பு - மாசு. | |
|
|