பக்கம் எண் :


இராவண காவியம் 187

   
         9.     அகழெ ழுந்தசெந் தாமரைப் பூவழ கழியத்
               திகழ வந்தவெண் மதியெனத் திகழ்தர வளர்ந்தாள்
               புகழி ராவணன் றேவியென் றுலகினர் போற்ற
               இகழி லாதொளி ரிளமதி திருவயிற் றிருந்தாள்.
 
கலி விருத்தம்
 
         10.    தண்டாமரை மலரோகனி தமிழோதமி ழகமோ
               உண்டோர்மன முள்ளூறவு வக்குந்தெளி தேனோ
               கண்டோகனி யோவேறெது காணோமென வேதான்
               வண்டார்குழல் என்றேபெயர் வைத்தார்மன மொத்தே.

         11.    தாயாகிய தமிழைச்சிறு வாயாகிய தமிழச்
               சேயாகிய தானுந்தகு தெளிவாகவே நாளும்
               வாயாகியே கையாகியே மனமாகியே பூவுங்
               காயாகியே கனியாகிடக் கற்றேயறி வுற்றாள்.

         12.    ஏனோவித் தனைநாளென வெண்ணாதியல் கற்றாள்
               தேனோவொத் ததுவாமெனத் தேறாதிசை துற்றாள்
               ஆனாதித் தனைபாகென வறியாநடம் பெற்றாள்
               தானேமுத் தமிழாகிய தாயாமென னுற்றாள்.

         13.    தோலுஞ்சுவை யாழுந்தொகு துளையுங்கனி வாயும்
               நாலுந்தனை நீமுந்தியோ நான்முந்தியோ வெனவந்
               நூலும்புதி தாகும்படி நுணுகிக்கழி நுணுகி
               பாலும்புரை யாவின்மொழி பயிலிப்பய னுற்றாள்.

         14.    பாவைக்குல மெல்லாமவள் படிமைக்குற வாடும்
               கோவைக்குல மெல்லாமவள் குதலைக்கிடை நாடும்
               காவிக்குல மெல்லாமவள் கண்ணுக்குற வாடும்
               பூவைக்குல மெல்லாமவள் புள்ளுக்குல மாகும்.
-------------------------------------------------------------------------------------------
         9. அகழ் - குளம். இளமதி - மாயோன் மனைவி. 11. சிறுவாய் ஆகிய -
மழலைச் சொல்லையுடைய. வாய் கை மனம் ஆதல் - படித்து எழுதி உணர்தல். பூ -
கல்வி. 12. ஆனாது - நீங்காது. பாகு - பிரிவு. 13. தோல் - தோற்கருவி. துளை -
துளைக்கருவி. வாய் - மிடற்றுக்கருவி. நுணுகி - நுட்பமாக. கழி - மிக. பயிலி - பயின்று
14. படிமை - வடிவு. குதலைக் கிடை - பேசுமிடத்து, இதழிடம். காவி - கருங்குவளை.
புள் - பழகிய பறவை.