பக்கம் எண் :


இராவண காவியம் 189

   
         21.    மதியை வைத்து மதிகண்டு வாடிடாப்
               புதிய தாமரைப் பூவை யருகினிற்
               பதிய வைத்துப் பளிங்கி னொளியினைப்
               பொதிய வைத்துப் பொலியு முகத்தினாள்.

         22.    பிறையை வைத்துப் பிறையிற் படிந்துள
               கறையை நீத்துக் கருங்குழற் கற்றையை
               மறைய வைத்த மரையின் பொலிவினை
               நிறைய வைத்து நிலவுமிழ் நெற்றியாள்.

         23.    சிலையை வைத்துச் சிலையி னடிப்புறம்
               கொலைய வாளயில் கொன்னஞ் சுமைகயல்
               கலையி னோடளி காவி யரிக்குலம்
               நிலைய வெள்ளென நீள்கருங் கண்ணினாள்.

         24.    எள்ளி னாகிய வின்னிளம் பூவினை
               யெள்ளிச் சண்பகத் தின்மணந் தோய்தரக்
               கள்ள விழ்குமிழ் கண்க ளிடையினிற்
               கொள்ள வைத்த கொழுவிய மூக்கினாள்.

         25.    வள்ளை நீள்கொடி வைகிய மெல்லிலை
               எள்ளி யுண்கண்க ளென்னு மிணைக்கயல்

               துள்ளி யாடுந் துலங்குபொன் னூசல்போல்
               உள்ள மீர்க்கு மொளிமணிக் காதினாள்.

         26.    முருக்கை வைத்தம் முருக்கொடு செந்துவர்
               இருக்க வைத்தே யிதழ்விரி யாம்பலை
               நெருக்க வைத்துட னெட்டுருக் கோவையைப்
               பொருக்க வைத்துப் பொலியுஞ்செவ் வாயினாள்.

         27.    முத்தைக் கோத்து முழுத்துவர் வள்ளத்து
               வைத்துப் பின்னு மணமுகை முல்லையை
               ஒத்தி ருக்க முருந்து மொளிநிலாப்
               பொத்தி வைத்துப் பொலிவுறும் பல்லினாள்.
-------------------------------------------------------------------------------------------
         23. அயில் - வேல். கொல் நஞ்சு. கலை - மான். அரி - கோடு. 24. கள் - தேன். குமிழ் - குமிழம்பூ. 26. நெட்டுரு - நல்ல நிறம். 27. துவர் - பவளம். முருந்து - மயிற்பீலி.