28. தேனும் பாகுந் தெளிவுஞ் சுவைக்கனி யான சாறு மடிக்கரும் புந்தலை யானின் பாலு மலாவின் சுவையெலாம் மானி லாத வகையவின் சொல்லினாள். 29. புலமொ ரைந்தும் பொறிகளைந் துந்திகழ் தலையைத் தாங்குந் தலைவனா னாகையால் நிலைய பூகமே நீயெவன் நானிலத் திலையெ னக்கெதி ரென்னுங் கழுத்தினாள். 30. இன்ப சுங்கரும் பைமடித் தேயதன் முன்பு தாமரை மொய்முகைக் காந்தளின் முன்பு பைங்கிளி மூக்குத் துவர்கொள அன்பு டன்விருந் தாற்றிடுங் கையினாள். 31. ஈனும் வாழை யிளங்குலைச் செவ்விதழ் மானும் பொற்படா மென்று மறைத்தலான் தேனுங் கண்டுந் திகைக்குமின் சொல்லினாள் தானுங் கண்டிலாத் தன்னிகர் மெய்யினாள். 32. சொல்லை வென்ற துடியென் னிடையினும் சில்லை யென்றழச் சிற்றிழை யின்வகிர் நல்லை யென்றுபி னாடியம் மாவுரு இல்லை யென்றே யிடைநுண் ணிடையினாள். 33. பொன்னை நேர்மரைப் பூவுஞ் செயலையும் என்னை நேரிலே மென்றுகக் கண்டுமே இன்னி சைச்செஞ் சிலம்பு புலம்பிடும் அன்னம் வெள்கு நடைமெல் லடியினாள். 34. வானுங் காடு மலையு மறிகடல் தானு நீர்மலி தண்பணை யும்பயில் நானி லந்தனைத் தாங்கி நமதிறை தானுந் தாங்குந் தமிழகம் போன்றனள். ------------------------------------------------------------------------------------------- 28. தலை ஆன் - சிறந்த மாடு. 29. பூகம் - கமுகு. 30. மடித்த கரும்பு கைக்கும், தாமரை உள்ளங்கைக்கும், காந்தள் முகை விரலுக்கும், கிளிமூக்கும் பவளமும் உகிருக்கும் உவமை. 32. இடைதல் - வருந்துதல். 33. செயலை - அசோகந்தளிர். உக - விழ. கீழே விழக்கண்டு சிலம்பு புலம்பு மென்க. 34. பணை - வயல். உவமைப் பொருள்கள் நானிலத்தனவாகலும், தமிழகம் நானிலத்தை யுடைத்தாதலும் அறிக. | |
|
|