39. புக்கவனு மலைச்சாரல் பின்னாக முன்னாடிப் புயல்போற் சென்று தொக்கமலை வளம்பலவுங் கண்டுதமிழ்த் திராவிடராந் தொழுதி சூழத் தக்கதமிழ்க் குலஞ்சூழத் தமிழர்கள்மா பெருந்தலைவன் றங்கி யுள்ள பக்கமலைச் சூழலிடைப் பாடியமைத் தினிதிருந்தான் பகையொன் றில்லான். 40. ஆங்கிருந்த மாயோனு மிராவணன்வந் திருத்தலைக்கேட் டவாவி னோடு பாங்குடையார் புடைசூழப் பலவகைக்கை புறைகொண்டு பரிவாய்ச் சென்று வீங்குகடல் முப்புடைசூழ் தமிழகத்தைத் தன்னுயிரின் மேலா வெண்ணித் தாங்கிவருந் தமிழர்கள்மா பெருந்தலைவ னிருக்கையதைச் சார்ந்து கண்டான். 41. கண்டவனுங் கொண்டுசென்ற கையுறையைத் திருமுன்பு கனிவாய் வைத்துத் தண்டமிழோர் பெருந்தலைவ! தமிழ்வாழ்க வாழ்கவெனத் தமிழர் கோனும் வண்டுலவு முல்லையந்தார் மாயோய்நந் தமிழ்வாழ்வென் வாழ்வே நீயும் கொண்டகுறை யிலவேயென் றுடனிருத்தி நலமெல்லாங் கொளக்கொண் டானே. 42. இனித்திடுசெந் தமிழ்மொழியைத் தாய்மொழியாக் கொண்டுபயின் றினிது வாழும் தனித்தமிழர்க் கொருநாளுங் குறையுண்டோ துயில்கொள்ளாத் தரியார் தம்மை நினைத்தபடி யுயிருண்ணு நீளிலைவேற் பெருமன்னா நினது காப்பின் வினைத்திறம்வா ழியவென்று மாயோனுந் தலைமகன்பால் விடைகொண் டானே. | |
|
|