பக்கம் எண் :


194புலவர் குழந்தை

   
         49.   சந்தோடு ததைந்த தடம்பொழிலிற்
               பந்தாடி மகிழ்ந்திடு பைங்கிளியார்
               கொந்தோடு குளிர்ந்திடு கோங்கினிடை
               வந்தாடுவர் குன்ற வரிக்குரவை.

         50.    மஞ்சள்ளிய மாதவி நீழலிடை
               நெஞ்சள்ளிய நீடிசை பாடியடு
               நஞ்சள்ளிய வேல்விழி நன்னுதறே
               னஞ்சொல்லியர் கும்மி யடித்திடுவர்.

         51.    மலையுஞ்சொல வண்டமிழ் பாடிமணிக்
               கலமிஞ்சு சிலம்பு கறங்கிடவே
               பொலமஞ்சிறை பைங்கிளி பூவைமயிற்
               குலமஞ்ச வடிக்குவர் கோலாட்டம்.

         52.    இல்லாவிடை யாரினை யாவெதிரா
               மல்லாடுவர் போலிசை வாய்பாடிக்
               கல்லோலிட வேயெதிர் கைகொட்டிச்
               சில்லோதிய ராடுவர் தெள்ளேணம்.

         53.    கற்றைக்குழல் காட்டியே திங்கள்முகம்
               மற்றைப்புற மாக வலங்கொடுதோள்
               பற்றித்தமிழ் பாடியே யிவ்விருவர்
               சுற்றிப்பறந் தாடுவர் தோணோக்கம்.

         54.    நாவல்லி நயந்து நயந்துதமிழ்ப்
               பூவல்லி பொருந்துவ பாடியிள
               மாவல்லி மலர்ந்த வகைவகையாம்
               பூவல்லியர் கொய்து புதுக்குவரே.

         55.    உண்டோவிலை யோவெனு நுண்ணிடையார்
               வண்டூத மலர்ந்திடு மாமலரின்
               செண்டோடு தொடுத்த செழுந்தொடையல்
               வண்டார்குழ லாள்குழல் வைக்குவரே.
-------------------------------------------------------------------------------------------
         49. ததைந்த - நெருங்கிய. கொந்து - கொத்து. வரி - பாட்டு. 50. மஞ்சு - முகில். மாதவி - குருக்கத்தி. நன்னுதல் தேன் அம் சொல்லியர். 51. கறங்குதல் - ஒலித்தல். 52. இடையார் - இடை. இனையா - வருந்த. கல் - மலை. ஓல் - எதிரொலி. சில் - குளிர்ந்த. ஓதி - கூந்தல். தெள்ளேணம். இவ்விருவர் எதிர் நின்று கை கொட்டியாடும் ஆட்டம். 53. தோணோக்கம் - இவ்விருவர் முகமாறித் தோள்களைப் பிடித்துக் கொண்டு சுற்றிப்பறந்து பாடியாடுதல். 54. வல்லி - அகவிதழ். பூவல்லி - பூப்பறித்துக் கொண்டு பாடும் பாட்டு.