63. தாவிவரு நீரருவி தாண்டியே குதிப்பர் காவினிடை மாமயில் களிப்பரவை காண்பர் பூவையொடு கிள்ளையின் புதுக்குவரி கேட்பர் மாவினிளம் பிஞ்சுகொடு மாதுளை யடிப்பர். 64. பன்றிகொடி வள்ளிகள் பறிப்பதை யொறுப்பர் குன்றினுழை யேறுகள் குமுறுமொலி கேட்பர் கன்றினொடி யானைகள் கடுகுவது காண்பர் வென்றிவரி வேங்கையை விரட்டியே சிரிப்பர். 65. தட்டைகவ ணோடுகுளிர் சான்றதழல் கொண்டு விட்டகல வேகதிரை மெல்லியல ரோட்ட ஒட்டியுற வேபுனம தொய்யென வெருண்ட தட்டிவழி யேகுவர் தருக்கொடரி மான. 66. மானினை வெருட்டுவர் மயிலினை யழைப்பர் தேனினை யொழுக்குவர் செழுந்தினை கொறிப்பர் பூநனை பறிப்பரொரு பூஞ்சினை யசைப்பர் ஏனினு மினைப்பல வியற்றிய நடப்பர். 67. கண்ணிய படிக்கினிய கண்டுகளி கொண்டு பண்ணியல் பொதிக்கிளவி பாங்கினமர் குன்றம் நண்ணியொர் குளக்கரையில் நண்பர்க ளிருப்ப அண்ணலுந் தனித்துமொ ரணிப்பொழி லடைந்தான். ------------------------------------------------------------------------------------------- 63. பரவை - ஆடல். புதுக்குவரி - புதுப்பாட்டு. 64. நுழை - குகை. ஏறு - சிங்கம். 65. தட்டை, கவண், குளிர், தழல் - இவை கிளிகடி கருவிகள். தட்டை - மூங்கிலை ஒரு பகுதி கணுவுக்குப் பக்கமாக நறுக்கிப் பல பிளவாகப் பிளந்து ஓசை யுண்டாகத் தட்டுதல். குளிர் - மூங்கில் சிம்பை வளையும்படி மெல்லிதாகச் சீவி ஓசையுண்டாகச் சுழற்றி வீசுதல். தழல் - பனையோலையை இருதலையும் முடிந்து ஒரு கோலை விற்போல் வளைத்து அதன் இருதலையினும் மாட்டி, கோலிற் கயிற்றைக் கட்டி வீசி ஓசையுண்டாக்குதல். வெருண்டு புனத்திடம் செல்ல அதட்டுவ ரென்க. 66. நனை - முகை. 67. கண்ணிய - எண்ணிய. பண் இயல் பொதி கிளவி - இசையிலக்கணம் பொதிந்த சொல்லையுடைய வண்டார் குழலி. | |
|
|