பக்கம் எண் :


இராவண காவியம் 197

   
அறுசீர் விருத்தம்
 
         68.    கண்ணுக் கினிய பூம்பொழிலைக்
                    கண்டே யின்பங் கொண்டவனும்
               பண்ணுக் கினிய குறும்பாட்டுப்
                    பாடக் கேட்டுப் பரிவெய்தி
               வண்ணக் கிளியின் மொழியேயோ
                    மணிவாய்ப் பூவைக் குரலேயோ
               எண்ணற் கினிய செந்தமிழி
                    னிசையோ குழலி னின்சுவையோ.

         69.    குழலோ யாழோ செந்தேனைக்
                    குடிக்குஞ் சுரும்பி னின்னிசையோ
               எழிலார் குன்றக் குறக்கொடியி
                    னிசைச்செந் தேனோ வெனவுள்ளம்
               உழலா நின்றே கண்களிக்க
                    வுள்ள முவக்கச் செவிகுளிரக்
               கழலோ னேரப் பாட்டுடையார்க்
                    காணச் சென்றா னத்திசையே.

         70.    செல்லச் செல்ல வின்னிசையுஞ்
                    சிறுகிச் சிறுகிச் செவிகேட்ப
               தில்லைப் போலு முளபோலு
                    மிதுவென் கனவோ நனவேயோ
               சொல்லச் சொல்லத் தமிழிசையைச்
                    சுவைத்துச் சுவைத்துச் செஞ்செவியும்
               புல்லிக் கொள்ள விடமின்றிப்
                    புறம்விட் டனவோ வெனவயர்த்தான்.

         71.    ஆடுஉ வொருவன் றனைநோக்கி
                    யணித்தா வருத லதுநோக்கி
               தோடார் குழலு மெழுந்திருந்து
                    துகிலை நீவி யணிதிருத்தி
               ஏடார் பொதிப்பூந் தொடைதிருத்தி
                    யிருள்சூழ் கொண்ட குழறிருத்திப்
               பாடோர் புதர்ப்பூக் கொய்வாள்போற்
                    பைம்பொற் பாவை யெனநின்றாள்.
-------------------------------------------------------------------------------------------
         68. பரிவு - அன்பு. 70. அயர்த்தான் - ஐயப்பட்டான் 71. ஆடூஉ - ஆண். தோடு - பூ. ஏடு - இதழ். ஓர்பாடு - ஒருபக்கம்