72. ஐயப் பட்டே யின்னிசைவந் தடைந்த திசையே யவன்சென்று பொய்யிற் பட்ட விடையாரப் பொலிவிற் பட்ட பொன்பட்டால் நெய்யப் பட்ட வுடையுடுத்து நிழலிற் பட்ட நிழல்போற்பூக் கொய்யப் பட்டுத் தனிநிற்கும் கொம்பின் பக்கங் குறுகினனால். 73. தன்னை யறியா தேயுள்ளந் தடுமா றிடவே வழிப்பயணப் பொன்னை யிழந்தா ரேபோலும் புகலாய் வைத்த பெரியபொருள் தன்னை யிழந்தா ரேபோலும் தவறு செய்தார் தமைப்போலும் இன்ன தொன்றுந் தோன்றாம லேமாப் புற்றாங் கெதிர் நின்றாள். 74. முன்னும் பின்னும் பார்த்திடுவான் மூலை முடுக்கை யோர்த்திடுவான் தன்னைத் தானே நோக்கிடுவான் தனிப்பூங் கொம்பை யசைத்திடுவான் மன்னை வாழி என்றிடுவான் வாய்க்குள் ளேமுணு முணுத்திடுவான் என்னை யிதுபித் தோவென்பான் இவ்வா றலைந்து முடிவாக. 75. காலை மலரும் மணநாறுங் காந்தள் மலரும் வண்டூதும் மாலை மலரும் இளம்பாலை மலரும் அலைவாய்க் கழிக்கானற் சோலை மலரும் தமிழ்பாடும் சுரும்பர் மயங்கத் தொடுத்திட்ட மாலை மலர எதிர்நின்ற வண்டார் குழலைக் கண்டானே. ------------------------------------------------------------------------------------------- 73. புகல் - அடைக்கலம். ஏமாப்பு - இறுமாப்பு. 74. ஓர்த்தல் - ஆராய்தல். மன்னை வாழி - நிலைபெற்று வாழ்வாயாக. 75. காலை மலர் - தாமரை, மருதம். காந்தள் - குறிஞ்சி. மாலை மலர் - முல்லை. பாலை மலர் - பாலை. கானல் சோலைமலர் - நெய்தல். மலர - போல. ஐந்நில மலராலும் தொடுக்கப்பட்ட மாலைபோல நின்றாள் என்க. இது, காட்சி. | |
|
|