பக்கம் எண் :


இராவண காவியம் 201

   
        82.     என்னை நோக்காதி யானோக்க
                    இருகண் கொண்டு நிலனோக்கும்
               பொன்னி னன்ன நுதல்வியர்க்கும்
                    புறந்தோன் றாதுள் ளேசிரிக்கும்
               தன்னின் உள்ளச் சிதைவடக்கும்
                    தகைய மடமைக் குணமுடையாள்
               இன்னு மென்ன இதிலையம்
                    இன்றே வாழ்வை வென்றேனே.

        83.     போதை நாடி இந்நின்று
                    போதா யெனவே வண்டோச்சிக்
               கோதை தோள்தொட் டேநுதலுங்
                    குலவ முடிதா னேயவிழக்
               காதி னின்று மணித்தோடு
                    கழல வளையோ டவைதிருத்திப்
               பேதை பலகா லுடையுடுத்துப்
                    பெட்டே பயிர்ப்பிற் பட்டாளே.

        84.     பொன்னே மணியே பூங்கொடியே
                    புள்ளார் குழலே நின்னையர்
               தன்னோ ரம்பாற் கொல்யானை
                    தன்னை யெய்து போக்குவரால்
               மின்னே மயிலே மடமானே
                    வேங்கைப் புலியே யேயானும்
               இன்னே நின்று போகாம
                    லீரம் பால்நீ யெய்தாயே.

        85.     ஒடுக்க நின்றே பிறைநுதலு
                    முளரோ தியுந்தொட் டேநீவ
               உடுக்க வுடுக்க வுடையவிழ
                    வுடுத்தங் குடுத்துக் கைசலிக்கும்
               தொடுக்க நின்ற வரைஞாணுந்
                    தோளா டையும்பல் கால்திருத்தும்
               எடுக்க வெடுக்க வியையாமே
                    யேமுற் றில்லா வாலிகட்டும்.
-------------------------------------------------------------------------------------------
        82. இது கூடல் விருப்பம். களவு 8. மடமை - சொன்னதைக் கொண்டு அதை வெளிக்குக் காட்டாத பெண்மைக் குணம் 82, 83, 85, 87ஆம் பாட்டுக்களில் முறையே மெய்ப்பாட்டியல் 13, 14, 15, 16 சூத்திரங்களில் கூறப்படும் 15 மெய்ப்பாடுகளும் வருதல் காண்க. 83. போது - பூ. போதாய் - போ. குலவ - தடவ. பெட்டு - விரும்பி. பயிர்ப்பு - புதிதாக ஒன்றைக் கண்டவிடத்து மனங்கொள்ளாமை. (களவு - 11: 1, 2) 84. இன்னே - இங்கே. ஈரம்பு - கண்கள். (கள் - 11:3) 85. உளர்தல் - அசைதல். ஓதி - கூந்தல். ஏமுற்று - செருக்குற்று.