பக்கம் எண் :


இராவண காவியம் 207

   
         15.    தாவேந்தி யேமுன் றமிழுண்ட குற்றத்தால்
               மூவேந்தர் போற்றும் முகிழா விளையதமிழ்ப்
               பாவேந்தர் நோவப் பழிகொள்ளும் வான்குடிபோல்
               ஓவென் றலறி யொழியாயே பாழ்ங்கடலே.

         16.    அலையு மொலியவியா அம்மதியும் போய்த்தொலையா
               கொலைய விரவுங் குடியோடா வாயினுமென்
               நிலையை யறியாது நீங்களுந்தான் றுஞ்சீரேல்
               உலையுமெனக் கீங்குதுணை யுண்டோ மழைக்கண்காள்.

         17.    பொன்னடரிற் செய்பூப் பொலிபுதிய வட்டிலிலே
               இன்னடிசிற் பாலோ டினிதூட் டுவனின்னே
               கன்னங் கறுத்தபெருங் காக்கைச் சிறுபிள்ளாய்
               மன்னர்க்கு மன்னன் வரக்கரைந் தீயாயோ.

         18.    செந்தமிழ்ப் பண்பாடுஞ் செவ்வாய்ப் பசுங்கிள்ளாய்
               வந்தென் னலனுண்டு வாரா தலர்செய்யும்
               சந்தங்கொள் வேங்கைத் தமி்ழ்க்குன்ற வாணனுக்கின்
               றெந்தன் நிலைமை யினிதெடுத்துச் சொல்லாயோ.

         19.    தாரார் குறிஞ்சிமலர்த் தண்குன்ற வாணனைநீ
               பாராத கண்கொண்டு பார்த்துப் பசுந்தோகை
               நேரா விரித்தாடி நெஞ்சை யுளப்படுத்தி
               வாரா யுடனழைத்து வண்ணப் பசுமயிலே.

         20.    கொலைவாணர் போலென் குடிக்குப் பழியாக்கி
               உலவா வுடம்புடையே னுள்ளங் கொடுசென்ற
               கலைவாணர்க் கென்றன் கருத்தைத் தெளிவாக
               மலைவாழு மாமுகில்காள் வழிக்கண்டாற் கூறீரோ.

         21.    கல்லார்ந் தமையாது கைநீங்கிப் பூம்பழன
               நெல்லார்ந் துயர்செல்லும் நீண்டசிறைப் பெண்புறவே
               வில்லார்ந் தெழுவுறழ்கை விடலைக் கடைபுதவத்
               தில்லார்ந் தொருதமியே மிருக்குநிலை யோதாயோ.
-------------------------------------------------------------------------------------------
         15. முகிழா - குவியாத, குன்றாத 17. அடர் - தகடு. 18. அலர் - ஊரவர் பேசும் பழிப்புரை. 19. பாராதகண் - தோகைக்கண். 20. உலவா - வாடிய. வரைதற்குறி்ப்பு. 21. எழு - தூண். புதவு - கதவு. இது, பிரிவுக் குறிப்பு.