29. விருந்தே லென்றா லன்னையு மேலா வேம்பென்பாள் அருந்தே னென்றால் தேனிது கொஞ்ச மருந்தென்பாள் மருந்தே தென்றால் தோழியு மேனோ வாய்பேசாள் பொருந்தா விந்த வாழ்வை யளித்தான் பொல்லாதான். 30. ஊரே தென்றா னொள்ளிலை வேலா னூர்சொல்லப் பேரே தென்றான் பேரழ கோனும் பேர்சொல்ல ஓரா தென்னெல் லாமோ கேட்டென் னுளமோடு பேரா நின்றான் வாரா னின்னும் பிழையென்னே. 31. அன்னை யுரைத்த மாதவி நீழ லணுகாமுன் என்னை யடுத்தே பிரியே னென்ற வெமதென்னை என்னை யுரைத்த மொழியுணராம லிகலார்போல் அன்னை யயிர்க்க நின்றன னீதோ ரறமேயோ. 32. சிறையே செய்தார் நெஞ்சினை விட்டுச் சிறியேனை நிறையே யென்னைத் தனியழ விட்டு நீங்கிற்றே குறியே செய்து புள்ளின மென்னைக் குறைகாணும் இறையே யின்னு மெத்தனை நாளோ விதுதானே. 33. நல்லது சொன்னாற் சீறி விழுவாள் நானுண்மை சொல்லவி தென்னோ நாண மடுக்குந் தொடைதந்த நல்லவன் வந்தாள் என்மன மேனோ நகைகொள்ளும் தொல்லையை நீந்துந் தோணி யெனக்குத் தோன்றாதோ. 34. என்னே நாற்றம் மேனியி லேகண் ணிவ்வாட்டம் பொன்னே யேன்விளை யாடாய் பாலும் புசியாதேன் இன்னே தனியா யிந்நடை யேன்றா யிடைதுஞ்சாய் என்னே தோழியர் காண வுரைப்பா ளேநாண. ------------------------------------------------------------------------------------------- 31. அன்னை - தோழி. என்னை - தலைவன். என்னை - என்ன காரணம். அன்னை - செவிலி. அயிர்த்தல் - ஐயுறுதல். 32. நிறை - அடக்கம். புள்ளினங் குறைகாணலாவது - பறவைகள் தாமாகவே எழுந்த ஒலி கேட்டுத்தலைவி வந்தாளென வந்துபார்த்துத் தலைவியைக் காணாது வெறுங்களங் கண்டு தலைவன் வருந்திச் செல்வான். பின்னர்த் தலைவி சென்று தலைவன் வந்துபோன குறிகண்டு வருந்துவள். இது அல்ல குறிப்படுதல். (கள-14:1). இது, இருவர்க்கும் நிகழும். 33. மெய்-14 34. (கள-13) உரைப்பவள் உயிர்த்தோழி. | |
|
|