கலைப்போர் முரசுதான். இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது, இராவணனைத் தேவனாக்க வல்ல - தமிழனாக்க. அதாவது வீரனாக்க! முன்னதற்குக் கவி, வானையும் வானிலுறைவோரையும் துணைக்கொள்ள நேரிட்டது. இந்நூலுக்கு அது தேவையில்லை. முன்னூலில் புதைந்துள்ளவைகளைக் கொண்டே, இராவணனின் உருவம் இத்தன்மையது என்று எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். சம்பராசுர யுத்தம் என்று முன்னூல் கூறுகிறது. அசுரன் அவன் என்று பயங்காட்டுகிறது. இராவண காவியத்திலே சம்பரன் அசுரனல்லன், பாண்டியன் எனப்படுகிறது. எதைக் கொண்டு இம்முடிவு கட்டுகிறார் ஆசிரியர்? முன்னூலீலே சம்பராசுரன், மீனக்கொடியோன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது; ஆக, மீனக்கொடி பாண்டியனுக்குரியது. எனவே சம்பரன் அசுரனென்று ஆரியரால் நிந்திக்கப்பட்ட பாண்டிய மன்னனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டுகிறது இந்நூல். இஃதே போலவே, இந்நூலின்கண் காணப்படும் பல்வேறு நிகழ்ச்சிகட்கும் ஆதாரங்கள், இராமாயணத்திலிருந்து சலித்து எடுக்கப்பட்டவையே யாகும். இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், ஆரிய நேசர்கட்கும், ஒரே ஒரு வழிதான் உண்டு. இராமாயணமே பொய்க்கதை, அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்துவிடுவதுதான். வேறு மார்க்கம் இல்லை. கதை கிடக்கட்டுமய்யா, காவிய ரசனை இருக்கிறதே! அது, கம்பனின் இராமாயணத்தில் பொங்கி வழிகிறதே! அஃதிருக்கட்டும் அச்சம் ஏன்? கொச்சைத் தமிழிலே, ஏதேதோ கூறிடுவோர் கூறட்டும். அழகு கவிதையில் ஆரிய இராமன் மிளிர்கிறான் என்று கூறுவதற்கும் இந்தப் பொல்லாத குழந்தை இடந்தரவில்லை. கூற வேண்டியதைக் காவியச் சுவை குறைவுபடா வண்ணம் கூறிவிட்டிருக்கிறார். அங்கு ஆறு ஓடும் விதம் எவ்வளவு அழகுபட உளதோ, அவ்வளவு அழகுபட இங்கு முளது. அங்கு இயற்கைக்குத் தமிழ் ஆபரணம் பூட்டப்பட்டிருப்பது போலவே, இராவண காவியத்திலும் பொலிவுறப் பூட்டப்பட்டுள்ளது. அதிலாவது, தேவாம்சம் புகுந்து தமிழின் இனிமைக்கு ஊறுதேடுகிறது. இதன்கண் அக்குறையும் கிடையாது. அது ஆரியங் கலந்த கடுந்தமிழில் புலவர்க்காக ஆக்கப்பட்டது. இது எளிய இனிய தனித்தமிழில் எல்லாத் தமிழ் மக்களுக்கும் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாகச் சில கூறுவோம்! | |
|
|