42. தோழியர் கூடிப் புனமயில் போலச் சூழ்தந்து வாழியர் காணு முகமதி யேபிறை மதியென்ன ஏழிசை பாடுஞ் செந்துவர் வாயா லெம்மீரே வாழியர் நீரே யம்மதி போல மகிழ்ந்தென்னும். 43. தூதிடை செல்லாப் பேதை யுனக்கோ தூவென்று மாதுளை முத்தை வாரி யிறைத்து மணிமுத்தக் கோதை தெறித்துப் பைங்கிளி யேங்க கூடிட்டே ஊதை யலைப்பப் பேதுறு கூந்த லொடுசெல்வாள். 44. வண்ட லிழைத்துத் தோழியர் கூடி வாவென்ன வண்ட லிழைத்துக் கொண்டொரு தோகை மயிலென்ன வண்ட லிழைத்துக் கதிர்முத் தீனும் மணல்முன்றில் கண்ட னிழற்கீ ழாழி யிழைத்துக் கைநோவாள். 45. மெய்விறல் காட்டி யாடியே முடிவில் மெலிவுற்றுப் பொய்விறல் காட்டி யாடிடும் விறலி போலம்மா செய்விர லாழி சிதைந்து ளழிந்த திருவன்னாள் கைவிர லாழி யீநிலை கொள்ளக் காண்பாளே. 46. வாயுங் கண்டுரை யாடா தோவுற வாய்க்கின்பம் பாயுங் கண்டு மருந்தாள் மேனி பையெனமை தோயுங் கண்டுஞ் சாதே மனமுந் துயர்கொண்டே ஆயுங் கண்டுகொ ளாத வுருவ மதுகொண்டாள். ------------------------------------------------------------------------------------------- 42. நீரே அம்மதி போல மகிழ்ந்து வாழியர் என்னும். 44. தூ - இகழ்ச்சி. ஊதை - காற்று. பேதுறுதல் - அலைதல். 44. வண்டல் - விளையாட்டுச் சிற்றில். வண்டல் - சந்தனக் குழம்பு. இழைத்தல் - நெகிழ்த்தல், அழித்தல். வண்டு - சங்கு. அல் - துன்பம். வண்டு அல் இழைத்து - சங்கு வருந்தி. கண்டல் - தாழை. ஆழியிழைத்தல் - கண்ணை மூடிக்கொண்டு பெருவிரலை ஊன்றிச் சிறுவிரலால் மணலில் வட்டமிடுதல். தொடங்கிய கோட்டில் வந்து பொருந்தினால் காதலன் உடனே வருவான் என்பது. ‘கூடலிழைத்தல்’ எனவும் பெயர் பெறும். இது, காக்கையைக் கரையச் சொல்வதுபோல் பிரிவாற்றாமையால் செய்வது. 45. விறல் - மெய்ப்பாடு. விறலி - ஆடினி. விரலாழி - மோதிரம். மோதிரத்தின் மீது ஈ உட்கார்ந்தால் காதலன் விரைவில் வருவானெனப் பார்ப்பாள். 46. கண்டு - கற்கண்டு. ஓவுற - ஒழிய. பை - பசுமை, பசலை. ஆய் - செவிலி. | |
|
|