51. வினையிடை தவிர வெங்கும் வெளியிட மிலாது போக மனையிடை யிருந்த மாதர் மறுகிடை வந்து தங்கள் மனமென வன்ன மென்ன மானெனப் பாவை யென்னப் புனமயி லென்னப் போந்து பொம்மெனச் சூழ்ந்து மொய்த்தார். 52. மானினங் கானை நீத்தும் வண்டின மலரை நீத்தும் பானறா மரைமீ னீரைப் பகைத்துநஞ் சரவை நீத்தும் கூனிய வாள்வே லம்பு கொட்டிலை நீத்தும் வந்தே தேனனார் முகங்க ளென்னுந் திங்கள்மீ தேறிப் பார்க்கும். 53. மங்கைய ரின்ன ராக மைந்தர்சும் மாவிட் டாரோ எங்குமே யிடமின் றாக வெழுச்சிபின் பிடித்துத் தள்ள உங்கொளி பொருடே டுங்கா லொளிபெறு விழியார் போலத் திங்களை மீன்பல் கோடி திரண்டுசூழ்ந் தனபோற் சூழ்ந்தார். 54. மாடிமீ தேறு வாரும் மதின்மிசைத் தாவு வாரும் ஓடியே முன்செல் வாரு மொருவர்மீ துந்து வாரும் சாடியே தள்ளு வாருந் தள்ளிமுன் செல்லு வாரும் ஆடவ ரவாவுஞ் செய்ய வழகனைக் காணு லுற்றார். 55. உயர்மரந் தாவு வாரு மொய்யென வேவு வாரும் இயலறை சேரு வாரு மேணிமே லேறு வாரும் அயலிட மதுவின் றாக வணிநிலா முற்றத் தேறிச் செயலற வின்றிக் கண்கள் செறிப்பறி வுறக்காண் பாரே. 56. கண்ணிணை களிப்பக் காண்பர் கைகுவித் திறைவா வென்பர் உண்ணிக ளுவகை பொங்க வூமர்போ லோவென் றார்ப்பர் மண்ணிய கலவை யோடு மலர்பனி நீரி றைப்பர் எண்ணிய தறியா தன்னா ரேதெதோ செய்வா ரம்மா. 57. நங்கையர் குழாங்க ளெங்கும் நறும்புகை யூட்டிச் செல்வர் மங்கலப் பொருள்கள் தாங்கி மணப்பொருள் வீசிச் செல்வர் தெங்கொடு கனியும் பூவுந் திகழ்தரத் தாங்கிச் செல்வர் சங்கின மொலிப்ப வேவெண் சாமர மிரட்டிச் செல்வர். ------------------------------------------------------------------------------------------- 51. வினை - வீட்டுவேலை. இடை தவிர்தல் - நீங்கல். 52. மான் முதலியன கண்ணுக்குவமைகள். பானல் - கருங்குவளை. 53. உங்கு - நடுவிடம். 55. செயல் அறிவு இன்றி - இமையாது. செறிப்பு அறிவு உற - காட்சியின்பம் பெற. 57. சங்கு - வளையல் | |
|
|