பக்கம் எண் :


இராவண காவியம் 225

   
        65.     பொற்றொடி யொடுபூங் கோதை பொன்மணிக் கலன்கள் தாங்கிச்
               சிற்றிடை யொடியு மென்று செம்பொற்பட் டாடை தன்னை
               முற்றுறச் சுற்றிக் கட்டி மோசம்போ கினும்போ மென்றே
               வெற்றிகொள் காப்ப தாக மேகலை யதன்மே லிட்டார்.

        66.     வாடைமென் குழலாள் செல்லும் வழியிடை யெதிர்ப்பா டாகும்
               ஆடவ ரிரியல் போக வடியினிற் சிலம்பை யிட்டுச்
               சேடியர் கூடி யின்னுஞ் செய்வன செய்து பூவைக்
               காடியி னழகு காட்டி யணிவன வணிந்தா ரம்மா.

        67.     முடிமுத லடியின் காறு முறைப்படி மென்பூங் கொம்பார்
               சுடர்மணிக் கலன்கள் பூட்டிச் சுமக்கெனப் பூவுஞ் சூட்டி
               இடையொடி படுமென் றேங்கி யிரங்கிநூ புரம்பு லம்பக்
               கொடியிடை யொடியாத் தாங்கிக் கொண்டுமே கூட்டிச் சென்றார்.

        68.     பொலம்படு பசுங்கட் டோகைப் புனமயி லினங்கள் சூழச்
               சிலம்பவித் திலகும் வெள்ளைச் சிறையுடைச் செங்கா லன்னம்
               சலம்படு செழுந்தேன் பாய்செந் தாமரைக் குளம்புக் கென்ன
               வலம்படு பூங்கொம் பன்னாள் மணவறைப் பந்தர் புக்காள்.
 
கொச்சகம்
 
        69.     நங்கையையு நம்பியையு நன்மணப்பொன் னிருக்கையின்கண்
               தங்கிடவே யினிதிருத்தித் தையலின்பெற் றோர்வந்து
               எங்குலமே யுன்மனம்போ லீந்தேமுன் காதலற்கே
               மங்கலமா மனைவாழ்க்கைத் துணைவர்களாய் வாழ்கென்றார்.

        70.     வாழ்கவெனப் பெற்றோர்கள் வாழ்த்தாமுன் றமிழரெலாம்
               வாழ்கதிரு மணமக்கள் வாழ்கபெருந் தமிழ்க்காதல்
               வாழ்கமா பெருந்தலைவன் வாழ்கமா பெருந்தலைவி
               வாழ்கநா ணாளுமென வாழ்த்திமகிழ் பூத்தனரே.

        71.     நின்றாங்கு நீரோடு நீர்கலந்தாற் போலநீர்
               ஒன்றாய்த் தமிழ்க்காத லோங்கி யுளங்கலந்தே
               பொன்றாப் பொருளியலின் பொருளின் றுறைதோய்ந்தே
               இன்றேபோ லென்றுமினி தின்புற்று வாழ்வீரே.
-------------------------------------------------------------------------------------------
        65. மேகலை - இடையணி, எண்கோவை மணி. 66. வாடை - மணம். இரிதல் - விலகல். ஆடி - கண்ணாடி. 67. நூபுரம் - சிலம்பு. 68. பொலம் - பொன். சலம் - நீர்; சலம்படுகுளம். வலம்படு - வலமாக.