பக்கம் எண் :


இராவண காவியம் 227

   
6. ஊர்மகிழ் படலம்
 
கலி விருத்தம்
 
        1.      நனிமகிழ் பூத்தவந் நகர மாந்தர்கள்
               இனையன செய்வதென் றிறுதி யில்லராய்
               அனையினுஞ் சிறந்தபே ரன்பின் மிக்கராய்
               மனமுறத் தலைவரை வாழ்த்தெ டுத்தனர்.

        2.      இறைவியைப் பெற்றநம் மிறைவன் வாழ்கென்பர்
               இறைவனைப் பெற்றநம் மிறைவி வாழ்கென்பர்
               இறைவியைப் பெற்றவ ரினிது வாழ்கென்பர்
               இறைவனு மிறைவியு மியைந்து வாழ்கென்பர்.

        3.      துறைமலி யகப்பொருள் தோய்ந்து வாழ்கென்பர்
               அறமலி மனையற மன்பின் வாழ்கென்பர்
               நிறைவளந் தேங்கியே நெடிது வாழ்கென்பர்
               குறைசிறி தின்றியே கூடி வாழ்கென்பர்.

        4.      எண்ணிய பொருளெலா மியைந்து வாழ்கென்பர்
               கண்ணிய கருத்தெலாங் கனிந்து வாழ்கென்பர்
               உண்ணிகழ் பொருள்வெளி யுற்று வாழ்கென்பர்
               தண்ணிய கைவளந் தழைத்து வாழ்கென்பர்.

        5.      செய்வதுந் தவிர்வதுந் தெரிந்து வாழ்கென்பர்
               உய்வது முறுவது மோர்ந்து வாழ்கென்பர்
               கைவரும் பொருளெலாங் கண்டு வாழ்கென்பர்
               பெய்வது போலறம் பெய்து வாழ்கென்பர்.

        6.      முப்பொருட் பெரும்பயன் முற்றி வாழ்கென்பர்
               ஒப்பிய பொருளெலா முற்று வாழ்கென்பர்
               தப்பெது மின்றியே தழைத்து வாழ்கென்பர்
               மெய்ப்பொரு ளுணர்ந்துமேன் மேலும் வாழ்கென்பர்.

        7.      தக்கது செய்தறந் தழைத்து வாழ்கென்பர்
               ஒக்கலோ டுண்டினி துவந்து வாழ்கென்பர்
               புக்கவில் லறப்பயன் பொருந்தி வாழ்கென்பர்
               மக்களைப் பெற்றுள மகிழ்ந்து வாழ்கென்பர்.
-------------------------------------------------------------------------------------------
        5. உய்தல் - நீங்குதல். உறுதல் - அடைதல். 6. முப்பொருள் - அறம்பொரு ளின்பம்.