பக்கம் எண் :


228புலவர் குழந்தை

   
        8.      முந்தையோர் போற்றிய முறையின் வாழ்கென்பர்
               தந்தைதாய் போற்றியே தகையின் வாழ்கென்பர்
               செந்தமிழ் போற்றியே சிறந்து வாழ்கென்பர்
               எந்தையே யெம்மையே யினிது வாழ்கென்பர்.

        9.      கோதையைத் தரித்தவக் குன்றை வாழ்த்துவர்
               போதினைப் பூத்தவப் பொழிலை வாழ்த்துவர்
               மாதினை மதித்தவம் மதியை வாழ்த்துவர்
               பாதுகாத் தளித்தவப் பகலை வாழ்த்துவர்.

        10.     நங்கையைப் பயந்தவந் நகரை வாழ்த்துவர்
               மங்கையை வளர்த்தவம் மனையை வாழ்த்துவர்
               மங்கலம் பொலிந்தநன் மணத்தை வாழ்த்துவர்
               தங்களூர் அடைந்தநாள் தன்னை வாழ்த்துவர்.

        11.     இன்னண மிவர்கள்வாழ்த் தெடுத்திச் செய்தியைச்
               சொன்னவர் கேட்டவர் துணைபு ரிந்தவர்
               இன்னவா றெனவெடுத் தியம்பி னோர்க்கெலாம்
               பொன்னையு மணியையும் பொழிந்து வந்தனர்.

        12.     புதியவத் தமிழ்மணம் புணர்ந்த காதலை
               இதுவெனத் தமிழர்க ளெவருங் காணவே

               முதுதமிழ் மொழியினால் மொழிந்த ருள்கெனப்
               பொதிபொதி யாய்த்தமிழ்ப் புலவர்க் கீந்தனர்.

        13.     உற்றவ ருரியவ ருகந்த நட்பினர்
               கற்றவர் கற்பவர் கலையின் வல்லவர்
               பெற்றவர் பெரியவர் பிறருந் தம்மனை
               உற்றுமே பெருவிருந் துண்டு வந்தனர்.

        14.     ஊரகம் பொருந்திய வூரி னோர்களும்
               சீரகம் பொருந்திய திருவினோர்களும்
               நீரகம் பொருந்திய நிலத்தி னோர்களும்
               ஊரகம் பொருந்தவே யுண்டு வந்தனர்.

        15.     அனையென வுளங்கொளா வன்பு பொங்கவே
               புனைமணி மாடநீள் பொன்ன கர்க்குளே
               எனையரு முவப்பிலா ரில்ல ராகவே
               மனையகந் தோறும் பொன்மாரி பெய்தனர்.
-------------------------------------------------------------------------------------------
        9. கோதை, போது - தலைவி, மதி - மாதம். 14. ஊரகம் - கிராமம்