பக்கம் எண் :


இராவண காவியம் 229

   
        16.     கடிநகர் புனைந்துலாக் காட்சி காணவே
               அடைவுட னாளர சலுவ லோடுகைப்
               படுதொழி லகங்களும் பணையும் பள்ளியும்
               விடுமுறை யாக்கியே விழவ யர்ந்தனர்.

        17.     அண்ணலம் பெருமனை யகன்றெ ருவெலாம்
               சுண்ணமுஞ் சாணமுந் துதையத் தூநிலா
               நண்ணியே சுவைபட நக்கும் பான்மைபோல்
               தண்ணிய வெண்பொடி சாந்தந் தூவினர்.

        18.     நடைவழி யாக்கிய நறிய காடுபோல்
               மடைவளம் பொலிமனை மன்றந் தோன்றவே
               படுகுலை வாழையும் பாக்கு மேனவும்
               தொடுகுலை பூங்கொடி துதைய நாட்டினர்.

        19.     வாரணந் தொடுபடா வளைந்து வான்றொடும்
               நீரண வியமுகில் நிலவிக் கண்படும்
               ஊரண வியபகை யுயிர்கொள் வாயெலாந்
               தோரணங் கட்டியே துலங்கச் செய்தனர்.

        20.     உலாவருங் காட்சியை யொருங்கு கண்டுமே
               எலாவருந் தெரிவுற வெழுதி வைக்கவே
               நிலாவிரி மதியென மாட நீடொறும்
               குலாவிடு பழந்தமிழ்க் கொடியை நாட்டினர்.

        21.     ஏவருங் கண்படா திருக்க வென்றுமே
               கோவைவாய்க் கொடியனார் கோல மிட்டுயர்
               மாவரு மகன்மனை மறுகெ லாந்தமிழ்
               ஓவியச் சாலைபோ லொளிரச் செய்தனர்.

        22.     உணக்கிய வகிற்புகை யூங்கு மூட்டியே
               கணக்கில வாகிய கலவைச் சாந்தொடு
               பிணக்கிய நறும்புனல் பெய்து பெய்தொரு
               மணப்பொரு ளகமென மணக்கச் செய்தனர்.
-------------------------------------------------------------------------------------------
        16. பணை - வயல். 17. அண்ணல் - பெருமை பொருந்திய, துகைதல் - செறிதல். 18. மடை - சோறு. மன்றம் - மரத்தடிப் பொதுவிடம். மனைகள் மன்றம் போல் தோன்ற. 19. வாரணம் - யானை. அணவிய - கலந்த, அடைந்த. வாய் - வாயில். 20. நீள்மாடம் தொறும் என மாற்றுக. ஏடு எழுத்தாணி யுண்மையால் எழுது மென்க. 21. ஏவரும் - அம்புபோன்ற; மா - குதிரை; யானை. 22. உணக்கிய - வறண்ட பிணக்கிய - கலக்கிய. நறும் புனல் - மணநீர்