23. பாத்தொறும் பொருட்பயன் படத்தொன் னாவலர் கோத்தபன் னூலையுங் குடைந்து கற்றுமே மூத்தறி வேமென முனைப்பொ டந்நகர் பூத்தபூங் காவெனப் பொலியச் செய்தனர். 24. புலங்கெழு மியதமிழ்ப் புலவர் பாப்புனை நலங்கெழு மியதமிழ் நாவின் றன்மைபோல் வலங்கெழு வேலவன் வாழ்வு மேயதொல் லிலங்கையை யிலங்குமா றிலங்கச் செய்தனர். 25. முதியரு மிளையரு முகையின் றூயரும் பதமுற விரிமலர்ப் பருவ மேயரும் இதுதக விலவெனு மிகழ்வை யோட்டியே புதியது புனைந்தொரு புதிய ராயினர். 26. ஏடுகைக் கொள்ளுவ ரிசைப்பக் கோட்குவர் பாடுவர் பண்ணொடு பாடக் கேட்குவர் ஆடுவ ரினியகூத் தாடக் காண்குவர் பீடுற முத்தமிழ் பெருக்கி யார்ப்பரே. 27. பண்பொடு நானிலம் பரந்து வாழ்வுறும் நண்பருஞ் சுற்றமு நயந்த மற்றரும் கண்பெறுங் காட்சியைக் காண வேண்டியே விண்பொரு மாடநீ ளிலங்கை மேயினர். 28. அணிநகர் மக்களிவ் வாறி ருக்கவே மணிநெடுந் தேர்மிசை மயிலொ டேறியே குணிகுண மாயொளிர் கோயில் வாயில்விட் டிணையிலா னகன்றெரு விடத்து மேயினான். 29. மாறுகொ டும்பரை மறைப்ப வெண்குடை வீறுகொ டவற்றுயர் மேல வொண்கொடி ஏறெனப் பல்லிய மிசைப்ப வண்ணலும் ஆறென வகன்றெரு வதனிற் சென்றனன். ------------------------------------------------------------------------------------------- 25. இளையர், முகைப் பருவத்தவர், மலர்ப் பருவத்தவர், முதியர் என முறை செய்க. 26. கோட்குவர் - கொள்ளுவர். 28. குணி - பொருள். குணம் - பண்பு; பொருளெலாம் பண்புடன் விளங்கும். | |
|
|