பக்கம் எண் :


இராவண காவியம் 231

   
         30.    புதியநீ ராற்றிடைப் போகுந் தோணியில்
               மதியொடு செங்கதிர் மருவிச் செல்லல்போல்
               பொதியவிழ் பூந்தொடைப் பொன்னன் னாளொடு
               சிதைவிலா வழகனுந் தேரிற் சென்றனன்.

         31.    வடிமணித் தேர்மிசை வயங்கித் தோன்றிடும்
               கடிகமழ் நானிலக் கவினப் பூப்புனை
               தொடையணி யழகனைத் துதைந்த லர்ந்தபூங்
               கொடியுட னிருவிழி குளிரக் கண்டனர்.

         32.    கனியொடும் வெளியதேங் காய்ப ழத்தொடும்
               நனியொளி விளக்கொடும் நறும்பு கையொடும்
               இனியவெற் றிலையொடு மேந்திக் கூந்தலார்
               மனைதொறும் மனைதொறும் வழிபட் டாரரோ.

         33.    ஆடவ ரோவிலை யரிவை மார்களும்
               கூடுறு சிறியருங் குழல்வெ ளுத்தரும்
               மாடிதொறி ருந்தவர் மலர்க்கை தூக்கியே
               கூடைகூ டையாய்மலர் கொட்டி வாழ்த்தினர்.

         34.    திருவிளக் கொடுபுகை சிதறும் பூக்களாற்
               கருமுகி லிடையிரு கதிரைச் சூழுமீன்
               பொரிசுட ரதுபடப் பொரிந்து வீழ்தல்போன்ம்
               பெருமகன் றிருவொடு பெயருங் காட்சியே.

         35.    முத்தமிழ்ப் புலவரு முறையி னாக்கிய
               அத்தமிழ்க் கருவியோ டாடல் பாடலை
               இத்தனை காலமா வியையப் பெற்றிலா
               அத்தனை பயனுமின் றடையப் பெற்றரே.

         36.    கும்பலாய் வாழ்கெனக் கூடி வாழ்த்தவே
               நம்பனு மூரெலாம் நயந்து காணவே
               வம்பவிழ் தொடையொடு வயங்கித் தோன்றுபூங்
               கொம்பொடு குலமணிக் கோயில் புக்கனன்.
-------------------------------------------------------------------------------------------
         31. கவின - அழகிய. 34. புகை - முகில். விளக்கு - விண்மீன். தூவுபூ - வீழ்மின். இறைவனும் இறைவியும் - ஞாயிறு திங்கள். இருகதிர் - ஞாயிறு திங்கள்.